கேரளாவை சேர்ந்தவர்கள்: மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி - நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் வேலை செய்த கேரளாவை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Update: 2020-03-28 23:00 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் கேரளா மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாஞ்சோலை நாலுமுக்கு தேயிலை தோட்ட பகுதியில் கேரளாவை சேர்ந்த 24 வயது தொழிலாளி தங்கி இருந்தார். அவரது கையில் வித்தியாசமான முத்திரை குத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து சக தொழிலாளர்கள் விசாரித்த போது கேரளாவில் உள்ள மனைவியை பார்க்க சென்ற போது, அந்த மாநில அரசு தனது குடும்பத்தினரை வீட்டில் தனிமைப்படுத்தினார்கள். அதற்கான முத்திரை கையில் குத்தப்பட்டதாக தெரிவித்து உள்ளார். துருவி, துருவி கேட்டபோது தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து அவரை பிடித்து அங்குள்ள தனியார் தேயிலை தோட்ட ஆஸ்பத்திரியில் தனி அறையில் சேர்த்தனர். இதே நேரத்தில் கேரளாவை சேர்ந்த முதியவரும் இங்கு வேலை செய்து வருகிறார். அவரும் கேரளாவுக்கு சென்று விட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிறகு மணிமுத்தாறுக்கு வந்துள்ளார். அங்குள்ள வனத்துறை சோதனை சாவடியில், முதியவரை மாஞ்சோலைக்கு நடந்து செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் போலீசாரிடம் அந்த முதியவரை ஒப்படைத்தனர். போலீசார் அவருக்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதால் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த தகவல் நெல்லை மாவட்ட நிர்வாகத்துக்கு நேற்று தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்குள்ள கொரோனா வைரஸ் கண்காணிப்புக்கான தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாஞ்சோலை மக்கள் பீதியில் உள்ளனர்.

கேரளா மாநிலத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எப்படி மாநில எல்லையை தாண்டி தமிழகத்துக்குள் நுழைந்தார்கள், அதையும் தாண்டி கடும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு இடையே எப்படி மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிக்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, அவர்கள் 2 பேரும் இங்கு நுழைவதற்கு உதவியவர்கள் குறித்த பட்டியலை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 24 வயது வாலிபர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதேபோல் 83 வயது முதியவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்கு சேர்க்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 6 பேர் சிகிச்சை முடிந்து சென்று விட்டனர்.

தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளாவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்தன. 144 தடை உத்தரவு காரணமாக கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், இதர சிறிய வாகனங்கள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக எல்லையில் அமைந்துள்ள புளியரை பகுதியில் தமிழக போக்குவரத்து துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சோதனை சாவடி நேற்று முதல் மூடப்பட்டது.

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் தடை உத்தரவை மீறி சுற்றித்திரிந்த அடையகருங்குளம், ஆறுமுகம்பட்டி, கோடாரங்குளம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். முக்கூடலில் தடை உத்தரவை மீறி கடையை திறந்ததாக முட்டை கடை மீதும், பீடி கம்பெனி மீதும் முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்