அறுவடை செய்யப்பட்ட நிலக்கடலை தேங்குவதை தடுக்க நடவடிக்கை - விவசாயிகள் கோரிக்கை

மன்னார்குடி பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நிலக்கடலை தேங்குவதை தடுத்து, உடனுக்குடன் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-03-28 21:45 GMT
மன்னார்குடி,

மன்னார்குடி, பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவ பட்டணம், திருப்பாலகுடி, காரிகோட்டை, நெடுவாக்கோட்டை, மூவநல்லூர், நெம்மேலி ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலையை தற்போது அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கொரோனா வைரசை தடுக்கும் வகையில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைவரும் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். ஒரு சில தொழிலாளர்களை வைத்து விவசாயிகள் அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் அறுவடை செய்த நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்குமா? நிலக்கடலையை தேங்காமல் விற்பனை செய்ய முடியுமா? என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து காரிக்கோட்டையை சேர்ந்த விவசாயி ரெங்கநாதன் கூறியதாவது:-

ஒருபுறம் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் பயிரிடப்பட்ட நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் பெரும் நஷ்டத்தை தந்துவிடுமோ? என்ற அச்சம் உள்ளது. பல்வேறு இன்னல்களை தாண்டி நாங்கள் அறுவடை செய்யும் நிலக்கடலை தேங்குவதை தடுக்கவும், உடனுக்குடன் விற்பனை செய்யும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்