திருவள்ளூர் அருகே, கொரோனா குறித்து வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பிய 2 பேர் கைது - 3 பேருக்கு வலைவீச்சு

திருவள்ளூர் அருகே கொரோனா குறித்து வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-03-30 22:15 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த திருத்தணி பகுதியில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும், அதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளதாகவும் வாட்ஸ்-அப்பில் நேற்று முன்தினம் சிலர் வதந்தியை பரப்பி உள்ளனர். இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனுக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின்படி திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுபற்றி விவாசரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வதந்தி பரப்பியது திருத்தணியைச் சேர்ந்த அப்துல் ரகுமான்(வயது 30), திருத்தணி காசிநாதபுரம் கொள்ளாபுரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சாமிநாதன்(33), மனோஜ்குமார், வெங்கடேசன், பவானி ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று அப்துல் ரகுமான், சாமிநாதன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்