நாகர்கோவிலில், கடைவீதிகளில் மீண்டும் அலைமோதும் மக்கள் கூட்டம் - ஊரடங்கு உத்தரவில் அலட்சியமா? போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நாகர்கோவில் கடை வீதிகளில் மீண்டும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2020-03-31 06:36 GMT
நாகர்கோவில்,

கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி, கொத்து கொத்தாக உயிர்களை காவு வாங்கி வருகிறது. நமது நாட்டிலும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலமாக வேகமாக பரவி வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் நமது நாட்டிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று உணர்ந்த மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவு கடந்த 24-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள், பார்கள், போன்றவை அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களுக்கான காய்கறி கடைகள், மளிகை கடைகள், பால் கடைகள், மருந்துக் கடைகள் போன்றவை திறக்கப்பட்டுள்ளன.

முழு அடைப்பு அறிவிக்கப்பட்ட பிறகு ஒன்றிரண்டு நாட்கள் மக்கள் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் போன்ற வாகனங்களில் அங்குமிங்குமாக சுற்றித்திரிந்தனர். அவ்வாறு அவசியமின்றி சுற்றித்திரிந்த நபர்களுக்கு நூதன தண்டனைகளை விதித்தும், ஊரடங்கை மீறியதாக வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்பிறகு வெளியில் வீணாக சுற்றுபவர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. அவசிய தேவைக்காக மட்டும் ஒருசிலர் வெளியில் வந்து சென்றனர்.

இந்தநிலையில் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே காய்கறி கடைகள், மளிகை கடைகள் திறந்திருக்கும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து கடந்த சில தினங்களாக காலையில் இருந்து மதியம் வரை சாலைகளில் இருசக்கர வாகனம் மற்றும் கார்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கிறது. நேற்றும் இதேபோல் இருந்தது. அதேபோல் சந்தைகளிலும் மக்களின் கூட்டமும் அதிகமாக இருந்தது.

வடசேரி சந்தையாக மாற்றப்பட்டுள்ள வடசேரி பஸ் நிலையம் நேற்று காலை மக்கள் கூட்டத்தாலும், இருசக்கர வாகன நெருக்கடியாலும் சிக்கி திணறியது. மேலும் பொருட்கள் வாங்க ஒருவர் வரும் நிலைமாறி கணவன்- மனைவியாக அல்லது 2 பேராகவோ வந்து வாங்கி சென்றனர். இதனாலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனாலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் குறிப்பிட்ட இடைவெளியில் நின்று பொருட்களை வாங்கி செல்ல மக்களை அறிவுறுத்தியபடி இருந்தனர்.

இதேபோல்தான் இந்து கல்லூரி அருகே உள்ள பொருட்காட்சி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த சந்தையிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. மீன் விற்பனை செய்யும் இடத்தில் அளவுக்கதிகமான கூட்டத்தை காண முடிந்தது. இங்கும் வாகன போக்குவரத்து கடுமையாக இருந்தது. கோட்டார் சந்தைப்பகுதியிலும், சவேரியார் பேராலய சந்திப்பு பகுதியிலும் மளிகைக் கடைகளுக்கு வந்து பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் நேற்று ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் இந்த சாலைகளில் சாதாரண நாட்களில் சந்தை செயல்படுவதைப்போன்ற வாகன நெருக்கடி காணப்பட்டது. இதையெல்லாம் பார்க்கும்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அனைத்து பகுதியிலும் போலீசார் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டார்கள்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் ஊரடங்கு உத்தரவை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ளன. ஆனால் மக்கள் இதன் ஆபத்தை உணராமல் சாலைகளில் மக்கள் அலட்சியமாக திரிவது? கொரோனா வைரஸ் குமரி மாவட்டத்தில் பரவ காரணமாக இருந்து விடுவார்களோ என்ற அச்சம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே மக்கள் நலனுக்காக, போலீசார் மீண்டும் தங்களது கெடுபிடி நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்