சேத்துப்பட்டில், 144 தடை உத்தரவு பின்பற்றப்படுகிறதா? கலெக்டர் ஆய்வு

சேத்துபட்டில் 144 தடை உத்தரவு பின்பற்றப்படுகிறதா? என்று கலெக்டர் கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2020-03-31 22:15 GMT
சேத்துப்பட்டு,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி சேத்துப்பட்டில் 144 தடை உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்வதற்காக தனது காரில் சென்றார்.

சேத்துப்பட்டு 4 முனை சந்திப்பில், காரில் இருந்து இறங்கிய கலெக்டர் கந்தசாமி சேத்துப்பட்டு ஆரணி சாலை முழுவதும் நடந்தே சென்று பெட்ரோல் பங்க், கடைகள் திறக்கப்பட்டுள்ளதா? என பார்வையிட்டார். மேலும் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படுகிறதா?, கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதா? என்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அந்த சமயத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு சில கடைகள் திறந்து இருந்தன. அப்போது கடை உரிமையாளர்களிடம் கடைக்கு வெளியே தொலைபேசி எண்களை எழுதி வைத்து, பொதுமக்களுக்கு வீட்டிற்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கி கொரோனா வைரசை தடுக்க முன்வரவேண்டும் என்று கூறினார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை அழைத்து கடுமையாக எச்சரித்தார். மேலும் அத்தியாவசிய தேவையின்றி வந்த வாகனங்களை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தார். மேலும் அங்கு திறந்திருந்த மருந்து கடைகளுக்கு சென்று மருந்து வாங்குபவர்களுக்கு சமூக விலகல் குறித்து தெரிவித்து, அவர்களை சமூக விலகல் மூலம் இடைவெளி விட்டு நிறுத்தி வையுங்கள் என்று கூறினார்.

முன்னதாக சேத்துப்பட்டு காமராஜர் பஸ் நிலையம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை அழைத்து பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கி கொடுத்தார். பின்னர் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது சேத்துப்பட்டு தாசில்தார் சுதாகர், சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் விஜயா, சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், சரவணன், இளநிலை உதவியாளர் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறையினர், பேரூராட்சி அலுவலக ஊழியர்கள், போலீசார் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்