அரியலூர் பகுதியில் சமூக விலகலை கடைபிடிக்காத 3 மளிகை கடைகளுக்கு ‘சீல்’

அரியலூர் பகுதியில் சமூக விலகலை கடைபிடிக்காத 3 மளிகை கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.

Update: 2020-04-01 04:46 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா, அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சமூக விலகலை கடைபிடிக்காமல் ஜெ.ஜெ.நகர், பெரியார் நகர் மற்றும் சுப்பிரமணி கோவில் தெரு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த 3 மளிகை கடைகளை உடனடியாக பூட்டி ‘சீல்‘ வைக்க அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் உத்தரவிட்டார். இதையடுத்து அந்த கடைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டன.

விற்பனையாளர்கள் தங்கள் கடைகளுக்கு வரும் வாடிக்ககையாளர்களிடம் கண்டிப்பாக சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். மேலும், விற்பனையாளரும், வாங்குபவர்களும் தனிநபர் சுகாதாரத்தினை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். எனவே, பொதுமக்கள் இவற்றை பின்பற்றி அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் வீடு, வீடாகவும் சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்று கலெக்டர் ரத்னா தெரிவித்தார்.

*அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கடைத்தெருவில் உள்ள ஒரு மளிகை கடையில் நேற்று முன்தினம் மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததாகவும், விதிகள் மீறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன் அங்கு சென்று பார்வையிட்டு, அந்த கடையை பூட்டி சீல் வைத்தார். இதனால் நேற்று உடையார்பாளையம் கடைவீதியில் உள்ள அனைத்து மளிகை கடைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

*பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் பெருமாள்(வயது 24). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர், குன்னம் அருகே உள்ள கரம்பியம் பகுதியில் ஆட்டுக்கிடை போட்டுள்ளார். இந்நிலையில் அவர், ஆடு மேய்க்கும் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி குடித்ததாகவும், சிரித்து பேசியதாகவும், இதை கவனித்த சிலர் பெருமாளை கண்டித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பெருமாள் விஷம் குடித்து வயலில் இறந்து கிடந்தார். இது குறித்து குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

*பெரம்பலூரை அடுத்த ஆலம்பாடி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். விவசாயி.

இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று அப்பகுதி வயலில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அங்கு வந்து கிணற்றில் இருந்து பசுமாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

மேலும் செய்திகள்