‘கொரோனா பாதித்த 3 பேருக்கும் சத்தான உணவு வழங்கப்படுகிறது’ - அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

கொரோனா பாதித்த 3 பேருக்கும் சத்தான உணவு வழங்கப்படுகிறது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

Update: 2020-04-02 07:27 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 3 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுவதில்லை என்று சிலர் தவறான தகவலை பரப்பியுள்ளனர். அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு நல்ல சத்தான உணவும் வழங்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். காலை 6 மணிக்கு எலுமிச்சம் பழம், இஞ்சி, மஞ்சள் கலந்த சூப், பால், 8 மணிக்கு கிச்சடி, இட்லி அல்லது பொங்கல், 2 வாழைப்பழம், 2 ஆரஞ்சு பழம், 10.30 மணிக்கு பிஸ்கட், காய்கறி சூப், பகல் 12 மணிக்கு எலுமிச்சை சாதம் அல்லது தக்காளி சாதம், சாம்பார் சாதம், கீரை பொறியல், 2 முட்டை, காய்கறி கூட்டு, மாலை 4 மணிக்கு சுண்டல், பிஸ்கட், காராமணி, 1 கப் டீ, இரவு 7.30 மணிக்கு 3 சப்பாத்தி அல்லது இட்லி, கிச்சடி, தயிர் சாதம், இரவு 9 மணிக்கு இஞ்சி டீ என சத்தான உணவு வழங்கப்படுகிறது. இதில் எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் பற்றாக்குறையின்றி நிறைவாகவே வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க போதுமான நிதியையும் அரசு வழங்கியுள்ளது. சிலர் வீண் வதந்திகளை பரப்புகிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம்.

டெல்லி மாநாட்டிற்கு சென்றிருந்த நிறைய பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கிடைத்த தகவலின்படி அவர்களை கண்டறிந்து அரசு பட்டியலிட்டபடி விழுப்புரம் மாவட்டத்தில் 6 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுதவிர இந்த நோய் தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தின்பேரில் மாவட்டம் முழுவதும் 56 பேர் கண்டறியப்பட்டு அவர்களை அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆகவே யாரும் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று வரை கூடுதலாக 810 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக படுக்கை வசதிகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியின் 2 மாணவர்கள் தங்கும் விடுதியில் 560 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 150 கூடுதல் படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் நகரில் உள்ள அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு 150 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. திண்டிவனம் என்ஜினீயரிங் கல்லூரியிலும் படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட உள்ளது. இன்னும் கூடுதலாக அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

ஆகவே யாரும் அச்சப்பட தேவையில்லை. மத்திய, மாநில அரசுகள் மற்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி மாணவிகள் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்