காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை வினியோகம்

காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது.

Update: 2020-04-02 22:30 GMT
காஞ்சீபுரம்,

தமிழக அரசு அறிவித்தபடி காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் இந்த மாதத்துக்கான அரிசி, சர்க்கரை, பாமாயில், பருப்பு ஆகியவற்றை இலவசமாக வழங்கும் பணி நேற்று தொடங்கியது. உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக நடைபெற்ற இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா நேரில் ஆய்வு செய்தார். காஞ்சீபுரம் வட்டத்துக்கு உட்பட்ட நரசிங்கராயர் தெருவில் உள்ள ரேஷன் கடையில் டோக்கன் முறையில் குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்கள் வாங்கி செல்கிறார்களா? என கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கூறியதாவது:-

முதல்-அமைச்சர் அறிவித்தபடி ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்படுகிறது. ரேஷன் கடையில் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, டோக்கன் வழங்கி அதில் குறிப்பிட்டுள்ள தேதியில் சென்று பெற்றுக்கொள்ளும் வகையில் அனைத்து கடைகளிலும் அட்டவணை ஒட்டப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பணியாளர்கள் மூலமாக ஒலிபெருக்கி வாயிலாகவும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் 1 மீட்டர் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று நிவாரண உதவித்தொகை பெற்றுகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் செந்தில்குமார் உடனிருந்தார்.

குன்றத்தூர்

அதேபோல் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையை அடுத்த வரதராஜாபுரம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையிலும் நிவாரண உதவித்தொகை வழங்குவதை மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார். ஆய்வின் போது பணியாளர்களிடம் முக கவசம், கையுறைகள் அணிந்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்க வேண்டுமென்று கூறினார். அவருடன் குன்றத்தூர் தாசில்தார் ஜெயசித்ரா, மண்டல துணை தாசில்தார் ஜெயக்குமார், படப்பை வருவாய் ஆய்வாளர் பிரபு உள்ளட்டோர் உடன் இருந்தனர்.

குன்றத்தூர் பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து தனியார் தொண்டு அமைப்புகள் சார்பில் 2 இடங்களில் சாலையோரம் வசிக்கும் 3 ஆயிரம் பேருக்கு இலவசமாக 2 வேளை உணவு வழங்கப்படுறது. அந்த இடங்களிலும் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது உணவு சமைக்கும் இடத்தில் உணவுகளை வாங்கிச் செல்வதற்காக சமூக இடைவெளி இல்லாமல் ஏராளமான பொதுமக்கள் கூடி இருந்ததால் அவர்களை சமூக இடைவெளி விட்டு நிற்குமாறு எச்சரித்த கலெக்டர், அவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்று உணவை வழங்கும்படி அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஊராட்சி மா.பொ.சி சாலை கூட்டுறவு ரேஷன் கடையில் நேற்று கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை ரூ.1,000 மற்றும் இலவசமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கும் பணியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.

கடம்பத்தூர் ஒன்றியம் சத்தரை கிராமத்தில் ரேஷன் கடையில் நிவாரண தொகை வழங்கும் பணியை சத்தரை ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி வெங்கடேசன் தலைமையில் கடம்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா சுதாகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமார், லதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். ரேஷன் கடை முன்பு சமூக இடைவெளிவிட்டு நாற்காலிகள் அமைத்து அதில் பொதுமக்கள் வரிசையாக அமர்ந்து வந்து பொருட்கள் வாங்கி சென்றனர். இலவச பொருட்களையும் தூரத்தில் இருந்து வாங்கும்படி குழாய் மூலம் வழங்கினார்கள்.

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகரில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு நிவாரண தொகை, பொருட்கள் வழங்கும் பணியை கும்மிடிப்பூண்டி தாசில்தார் குமார் தொடங்கி வைத்தார். வட்ட வழங்கல் அதிகாரி ஜெயச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் கிரிஜாகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதே போல கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வசித்து வரும் 910 குடும்பங்களைச் சேர்ந்த தமிழர்களுக்கு ரூ.1000 உள்பட நிவாரண உதவிகள் வழங்கும் பணியும் தொடங்கப்பட்டது.

திருத்தணி காந்தி ரோட்டில் உள்ள ரேஷன் கடையில் திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன் ரேஷன் அடடைதாரர்களுக்கு நிவாரண தொகை மற்றும் பொருட்களை வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம்

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று நிவாரண நிதி வழங்கப்பட்டது. நந்திவரம் கிராமத்தில் மலைமேடு அருகே உள்ள ரேஷன் கடையில் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நிவாரண தொகையை வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்கள் அனைவரையும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தி தனித்தனியாக வரிசையில் நிற்க வைத்து போலீஸ் பாதுகாப்புடன் நிவாரண தொகை மற்றும் பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்றது.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா வைரஸ் சிறப்பு நிவாரணம் வழங்கும் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்