கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை: முஸ்லிம் தலைவர்களுடன் எடியூரப்பா ஆலோசனை - மத வேறுபாடு இன்றி சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டுகோள்

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க முஸ்லிம் தலைவர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது மத வேறுபாடு இன்றி அனைவரும் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-04-04 00:30 GMT




பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

முஸ்லிம் தலைவர்களுடன் ஆலோசனை

கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம் மத மாநாட்டில் கர்நாடகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று திரும்பி உள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்ததால் அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவது மாநில அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.

மேலும் ஒரு சில இடங்களில் முஸ்லிம்கள் தொழுகையில் கலந்து கொள்வதும் தெரிய வந்தது. இந்த நிலையில் முஸ்லிம் மத தலைவர் களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

முழு ஒத்துழைப்பு

இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சி.எம்.இப்ராகிம், என்.ஏ.ஹாரீஸ், ஜமீர் அகமதுகான், நசீர் அகமது, அகண்ட சீனிவாசமூர்த்தி, ரிஸ்வான் ஹர்ஷத் மற்றும் முஸ்லிம் மத தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முஸ்லிம் மத தலைவர்கள் மற்றும் அந்த சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுடன் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினேன். அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர்கள் என்னிடம் உறுதி அளித்து உள்ளனர்.

மருத்துவ பரிசோதனை

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் குறித்த விவரங்களை தருவதாகவும், அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த ஒத்துழைப்பதாகவும், 14 நாட்கள் அவர்கள் தனிமையில் இருக்க உதவுவதாகவும் உறுதி அளித்துள்ளனர். அனைவரும் வீடுகளிலேயே இருந்தபடி பிரார்த்தனை மேற்கொள்ள அறிவுறுத்தி இருப்பதாக அந்த தலைவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது தான் ஒரே வழி என்பதை அனைவரும் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். இந்த ஊரடங்கு காலத்தில் மத வேறுபாடு இன்றி ஒவ்வொருவரும் கூட்டத்தில் இருந்து விலகி இருந்து சமூக விலகலை பின்பற்ற வேண்டும். கொரோனா பரவுவதை தடுக்க இது ஒன்று தான் வழி. இதை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

முன்எச்சரிக்கை

சுகாதார பணியாளர் களுக்கு ஒத்துழைப்பு வழங்குவாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர். மாநில மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். நாம் அனைவரும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றுவோம். கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் வெல்வோம்.

இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்