கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே, வங்கிகளில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் திரண்டதால் பரபரப்பு

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே நெல்லிக்குப்பத்தில் வங்கிகளில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-04-03 22:00 GMT
நெல்லிக்குப்பம்,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதில் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வருபவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடக்க நிலை என்பதால், அரசு ஊழியர்கள். அரசு மற்றும் தனியார் துறையை சேர்ந்த ஓய்வூதியம் பெறுபவர்கள் நேற்று நெல்லிக்குப்பத்தில் உள்ள வங்கிகளில் அதிகளவில் திரண்டனர். வங்கிகளுக்குள் பொதுமக்கள் அதிகளவில் நிற்காமல் இருப்பதற்கு ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும் வங்கிக்கு வெளியே மக்கள் கூட்ட நெரிசலுடன் ஒருவருக்கொருவர் முண்டியடித்தபடி இருந்தனர். இதனால் பரபரப்பு நிலவியது. ஏற்கனவே கொரோனாவில் இருந்து முதியவர்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு இருக்கையில் இங்கு வரிசையில் நின்றவர்கள் அனைவரும் முதியவர்களே என்பது தான் வேதனைக்கு உரிய ஒன்று.

தற்போதைய சூழலில் கொரானா வேகமாக பரவி அச்சத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் இதுபோன்ற சமூக இடைவெளி இல்லாமை என்பது, நோய் தொற்றுக்கு நாமே மறைமுகமாக வழி வகுப்பதாக அமைந்து விடும். எனவே, மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற முதியவர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கி அதிகாரிகளை ஒருங்கிணைத்து தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதியவர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்