களம்பூரில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு ‘திடீர்’ சாவு பணிச்சுமை காரணமா?

களம்பூரில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு ‘திடீர்’ மாரடைப்பால் இறந்தார். அவருடைய இறப்புக்கு பணிச்சுமைதான் காரணம் என்று கூறப்படுகிறது.

Update: 2020-04-04 06:24 GMT
ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த களம்பூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவர் குப்பன் (வயது 56). கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்கும் பணியில் போலீசார் இரவும், பகலும் வாகன சோதனை உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குப்பனும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து இரவு பகலாக பணியாற்றி வந்திருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை களம்பூர் பஜாரில் சோதனை சாவடி அருகே அவர் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது குப்பன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்ததும் அவருடைய சொந்த ஊரான போளூர் தாலுகாவில் உள்ள பெரியகரம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்த குப்பனுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், சங்கீதா என்ற மகளும், சதீஷ் என்ற மகனும் உள்ளனர். அவர்களுக்கு ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், களம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் ஆறுதல் கூறினர்.

இரவு பகலாக போலீசார், சுகாதாரத் துறை, வருவாத்துறையினர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் போலீஸ் ஏட்டு குப்பன் மாரடைப்பால் இறந்திருப்பதற்கு பணிச்சுமைதான் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து களம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்