நாகை மாவட்டத்தில், 4 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு கொரோனா நிவாரணம் - கலெக்டர் பிரவீன்நாயர் தகவல்

நாகை மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் 4 லட்சத்து 70 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-04-04 10:18 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் 122 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 3 விற்பனை சங்கங்கள், 1 மொத்த விற்பனை பண்டகசாலை, 2 தொடக்க கூட்டுறவு பண்டகசாலை, தமிழ்நாடு வாணிப கழகம் மற்றும் மீன்வளத்துறை ஆகியவற்றின் மூலம் 777 ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் மூலமாக ரேஷன் அட்டை தாரர்கள் 4 லட்சத்து 70 ஆயிரத்து 842 பேருக்கு மாதந்தோறும் 7,253 டன் அரிசி, 716 டன் சர்க்கரை, 2 ஆயிரத்து 377 டன் கோதுமை, 455 டன் துவரம் பருப்பு, 1,082 கிலோ லிட்டர் மண்எண்ணெய் வினியோகம் செய்யப்படுகிறது.

தற்போது கொரோனா நிவாரணமாக ரூ.1,000 மற்றும் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நடப்பு மாதத்துக்குரிய அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகியவை விலையின்றி வழங்கப்படுகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் 777 ரேஷன் கடைகள் வழியாக ரேஷன் அட்டைதாரர்கள் 4 லட்சத்து 70 ஆயிரத்து 842 பேருக்கு நிவாரண தொகுப்பு வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் நிவாரண தொகுப்பை வாங்க வருபவர்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்