சிறப்பு விமானத்தில் செல்ல அனுமதிக்காததால் தற்கொலைக்கு முயன்ற மலேசிய பெண் - திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

சிறப்பு விமானத்தில் மலேசியா செல்ல அனுமதிக்காததால் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-04-04 22:15 GMT
செம்பட்டு,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியாவில் இருந்து பன்னாட்டு விமான சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இதனால், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த மலேசிய நாட்டு பயணிகள் திருச்சி, சென்னை மற்றும் கொச்சி விமான நிலையங்களில் தவித்து வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மலேசிய நாட்டு தூதரக அதிகாரிகள், இவர்களை பல்வேறு கட்டங்களாக சிறப்பு விமானம் மூலம் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு அனுப்பிவைத்தனர். இதற்காக கடந்த 3 நாட்களாக சிறப்பு விமானம் இயக்கப்பட்டது.

கடைசியாக நேற்று காலை 9.30 மணிக்கு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு சிறப்பு விமானம் வந்தது. பின்பு 152 பயணிகளை ஏற்றிக் கொண்டு காலை 10.25 மணிக்கு மலேசியா நோக்கி சென்றது. கடந்த 3 நாட்களில் திருச்சியிலிருந்து மட்டும் 540 பயணிகள் சிறப்பு விமானம் மூலம் மலேசியா அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மீதம் உள்ள 67 பயணிகள் மலேசியா செல்ல முடியாததால், அவர்கள் 3 தனி பஸ்கள் மூலம் சென்னைக்கு நேற்று மாலை அனுப்பிவைக்கப்பட்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி அளவில் சிறப்பு விமானம் மூலம் சென்னையில் இருந்து மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறார்கள்.

இதற்கிடையே நேற்று காலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய பயணிகளை அனுப்பிவைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, மலேசியாவை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 58), அவருடைய மனைவி லலிதா (55) ஆகியோரின் பெயர்கள் அந்த பயண பட்டியலில் இருந்து நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுபற்றி மலேசிய நாட்டு துணை தூதரகத்தில் இருந்து வந்த அதிகாரிகளிடம் அவர்கள் விளக்கம் கேட்டபோது, அவர்கள் சரியான விளக்கம் கொடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த லலிதா, திருச்சி விமான நிலையத்தில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்ய முயன்றார். அப்போது, அருகில் இருந்த திருச்சி விமான நிலைய போலீசார், லலிதாவின் கையில் இருந்த தூக்கமாத்திரைகளை பறித்து அவரை காப்பாற்றினர்.

பின்னர், திருச்சியில் இருந்து நேற்று மலேசியாவிற்கு சென்ற சிறப்பு விமானத்தில் 180 பேர் பயணம் செய்யமுடியும். ஆனால் 152 பேர் மட்டுமே பயணம் செய்ய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மீதம் இருக்கைகள் இருக்கும் நிலையில் எங்களை ஏன் அழைத்துச் செல்லவில்லை என லலிதாவும், சுப்பிரமணியனும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அந்த 2 பேரும் அதே விமானத்தில் மலேசியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்