போடூர் இருளர் இனமக்களுக்கு கொரோனா நிவாரண தொகை, அரிசி, பருப்பு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது - கலெக்டர் மலர்விழி தகவல்

போடூர் இருளர் இனமக்களுக்கு கொரோனா நிவாரண தொகையான தலா ரூ.1,000 மற்றும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மலர்விழி கூறினார்.

Update: 2020-04-04 22:15 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா போடூர் மற்றும் பண்ணப்பட்டி வனப்பகுதி அருகே அரசு கட்டிக்கொடுத்துள்ள குடியிருப்புகளில் இருளர் இன மக்கள் வசித்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்கள் வனப்பகுதிக்கு சென்றனர். அதிகாரிகள் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மீண்டும் அவர்கள் ஊருக்கு திரும்பினர்.

இந்தநிலையில் நேற்று கலெக்டர் மலர்விழி போடூர் கிராமத்திற்கு சென்று இருளர் இன மக்களிடம் குறைகளை கேட்டார். மேலும் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் கீதா, உதவி கலெக்டர் தேன்மொழி தாசில்தார் சேதுலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் சென்றனர்.

பின்னர் கலெக்டர் மலர்விழி கூறியதாவது:-

இருளர் உள்ளிட்ட பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தர்மபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் நிவாரண தொகை மற்றும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போடூர் இருளர் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் வனப்பகுதிக்கு சென்று அவர்கள் வழிபடும் தெய்வத்திடம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து அனைவரையும் காப்பாற்ற வேண்டுமென்று வழிபாடு நடத்திவிட்டு மீண்டும் இருப்பிடங்களுக்கு திரும்பி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

போடூர் கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்களுக்கு கிடைக்கப் பெறவேண்டிய முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண தொகையான தலா ரூ.1,000 மற்றும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

மேலும் செய்திகள்