பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வீடுகளின் முன்பு அகல்விளக்கை ஏற்றிய பொதுமக்கள் - பல்வேறு இடங்களில் வாணவேடிக்கைகளும் விட்டனர்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று திருச்சியில் வீடுகளின் முன்பு அகல்விளக்கை பொதுமக்கள் ஏற்றினர். பல்வேறு இடங்களில் வாணவேடிக்கைகளையும் விட்டனர்.

Update: 2020-04-05 22:15 GMT
திருச்சி,

கொரோனா வைரசை தோற்கடிக்கும் விதமாக நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்று படுத்தும் நோக்கில், 5-ந் தேதி (நேற்று) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மக்கள் அனைவரும் மின்விளக்குகளை அணைத்து தீபம், மெழுகுவர்த்தி, டார்ச்லைட், மொபைல்போன் விளக்கு ஆகியவற்றை ஒளிரவிட்டு நம் வலிமையை காட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, நேற்று இரவு 9 மணி அளவில் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் வீடுகளின் முன்பு அகல்விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றியும், மொட்டை மாடி மற்றும் பால்கனிகளில் நின்றபடி செல்போன் லைட், டார்ச்லைட்டையும் ஒளிரவிட்டனர். குழந்தைகளும் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றனர். திருச்சியின் பல்வேறு இடங்களில் சரியாக 9 மணி அளவில் பட்டாசு வெடித்து, வாணவேடிக்கைகளையும் விட்டனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்று பெரும்பாலானவர்கள் வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள். இந்தநிலையில் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று அனைத்து மக்களும் தாமாக முன்வந்து வீடுகளில் விளக்குகளை ஒளிரவிட்டு கொரோனா வைரசை தோற்கடிக்க நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தினர். 

மேலும் செய்திகள்