கோவையில், அரசு நிவாரண நிதியை வீட்டிற்கு சென்று வழங்கும் ரேஷன் கடை ஊழியர்கள்

கோவையில் அரசின் நிவாரண நிதியை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு தேடி சென்று வழங்கி வருகிறார்கள்.

Update: 2020-04-05 22:00 GMT
கோவை,

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு ரூ.1000 நிவாரண தொகை மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை இலவசமாக வழங்கி உள்ளது. அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது.

முதலில் டோக்கன் வழங்கப்பட்டு ரூ.1000 ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்றுக்குள் (திங்கட்கிழமை) நிவாரண தொகையை வீடு தேடி வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினமும், நேற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு தேடி சென்று ரூ.1000-த்தை வழங்கினார்கள். சில கடை ஊழியர்கள் ஒரு இடத்தில் மேஜை போட்டு, போன் மூலம் பொதுமக்களை அந்த பகுதிக்கு வரவழைத்து வழங்கினார்கள்.

கோவை செல்வபுரம் உள்பட நகரின் பல பகுதிகளில் ஊழியர்கள் வீடு தேடிச்சென்று வழங்கும்போது, தங்களது வீதிக்கு விரைந்து வருமாறு வற்புறுத்தினார்கள். அரசு 6-ந் தேதிக்குள் பணத்தை கொடுத்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதால் தங்களுக்கு பணம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்று வீதிகளுக்கு வந்த ரேஷன் கடை ஊழியர்களை சூழ்ந்துகொண்டனர். இதனால் வரிசையாக நிறுத்தி பணத்தை வழங்கினர். பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து இருந்தாலும் ஒரே இடத்தில் பொதுமக்கள் குவிந்ததால் செல்வபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் சமூக இடைவெளி முழுமையாக பின்பற்றப்படவில்லை.

இது குறித்து கோவை மாவட்ட உணவு வழங்கல் துறை அதிகாரி கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 9 லட்சத்து 76 ஆயிரத்து 104 அரிசி கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ரூ.1000 மற்றும் இலவச அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. 85 சதவீதம் பேருக்கு வழங்கிவிடுவோம். மீதம் உள்ள 15 சதவீதம்பேர் வெளியூர்களுக்கு சென்று ஊரடங்கு உத்தரவினால் வரமுடியாத நிலையால் அவர்களுக்கு வழங்க முடியாத நிலை உள்ளது. அரசின் உத்தரவுக்கு ஏற்ப விடுபட்டவர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நிவாரண தொகை வழங்கும் ஊழியர்கள் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்