சளி, இருமல் உள்ளவர்களுக்கு கபசுர பொடி வினியோகம்

நீலகிரி மாவட்டத்தில் சளி, இருமல் உள்ளவர்களுக்கு கபசுர பொடிவழங்கப்பட்டு வருகிறது.

Update: 2020-04-05 21:45 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வந்த வெளிநோயாளிகள் பிரிவு ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு இருக்கிறது. 7 டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளிக்க 6 வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வட்டங்கள் போடப்பட்டு உள்ளன.

ஊட்டி மலைப்பிரதேசம் என்பதால், அடிக்கடி காலநிலை மாற்றம் ஏற்படும். இதனால் மக்களுக்கு சாதாரண சளி, இருமல், காய்ச்சல் இருக்கும். இதற்கிடையே தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால், சித்த மருத்துவ பிரிவு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சளி, இருமல் உள்ளவர்களுக்கு மூலிகைகள் கலந்த நிலவேம்பு மற்றும் கபசுர பொடிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் வெளிநோயாளிகள் பிரிவுக்கு வந்த பலர் கபசுர பொடி பொட்டலங்களை இலவசமாக வாங்கி சென்றனர்.

ஒரு நபருக்கு 50 கிராம் கபசுர பொடி வழங்கப்பட்டது. நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகரித்தது. இதனால் கீழ்தளத்தில் மக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, 5, 5 பேராக அனுப்பப்பட்டனர். அனைவரும் வாங்கி சென்றால் நிலவேம்பு மற்றும் கபசுர பொடி தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், சளி, இருமல் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்படு கிறது. அதேபோல் கோத்தகிரி பேரூராட்சியில் சுகாதார மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதுகுறித்து ஊட்டி சித்த மருத்துவ பிரிவு டாக்டர் ரத்தினம் கூறியதாவது:-

கபசுர பொடியை கபசுரக் குடிநீராக தயாரித்து அருந்தலாம். ஒரு நபர் 5 கிராம் பொடியை 200 மில்லி லிட்டர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து 50 மில்லி லிட்டர் அளவாக சுருக்கி குடிக்கலாம். பெரியவர்கள் 50 மி.லி., சிறியவர்கள் 20 மி.லி. முதல் 30 மி.லி. வரை அருந்தலாம். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 2 முறை குடிக்கலாம். சாதாரணமாக உள்ளவர்கள் ஒரு முறை குடித்தால் போதுமானது. 1 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை கபசுர குடிநீரை குடிக்கலாம். நிலவேம்பு பொடியில் 9 மூலிகைகள், கபசுர பொடியில் 15 மூலிகைகளும் அடங்கி உள்ளன. மருத்துவ குணம் உடையது. இதை குடிப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, சுவாச பாதைகளில் ஏற்படும் தொற்றுகளை நீக்க வல்லது. இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்