தூத்துக்குடியில் தடையை மீறிய வாகன ஓட்டிகளை விரட்டியடித்த போலீசார்

தூத்துக்குடி மாவட்டத்தில் தடையை மீறிய வாகன ஓட்டிகளை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-04-07 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவை இல்லாமல் மக்கள் வெளியில் நடமாடக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனாலும் தொடர்ந்து மக்கள் அலட்சியமாக வெளியில் நடமாடி வந்தனர். இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை கடுமையாக அமல்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை முதல் போலீசார் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அனைத்து வாகனங்களையும் வழிமறித்து விசாரணை நடத்தினர். அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் அடித்து விரட்டியடித்தனர். பல இடங்களில் மோட்டார் வாகன சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்தனர்.

நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் 903 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,071 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களின் 596 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகள் அமைந்து உள்ள பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் முடக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியில் வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களின் கைகளில் முத்திரை குத்தப்பட்டு உள்ளது. இவர்கள் யாரேனும் வெளியில் நடமாடுகிறார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்