கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

Update: 2020-04-07 22:15 GMT
ஊத்துக்கோட்டை, 

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்கவேண்டும். அதன்படி ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீரையும் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிடவேண்டும்.

அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கண்டலேறு அணையில் அதிகபட்சமாக வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் பூண்டி ஏரிக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 810 கனஅடி வந்து சேர்ந்தது.

இந்தநிலையில் கண்டலேறு அணையில் தண்ணீர் மட்டம் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நேற்று நிறுத்தப்பட்டது. இதனால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. வினாடிக்கு வெறும் 40 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக் கிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 27.93 அடியாக பதிவானது. 1,306 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 260 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 10 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி இந்த ஆண்டு ஒரே தவணையில் 7.500 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்