கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவன்- மாணவி

கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு மாணவனும், ஒருமாணவியும் விழிப்புணர்வு ஏற்படுதத்தி வருகிறார்கள்.

Update: 2020-04-08 22:15 GMT
திருப்பூர், 

கொரோனாவில் இருந்து தப்பிக்க நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் ஊரடங்கு. இந்த ஊரடங்கு உத்தரவை கடை பிடித்தால் மட்டுமே கொரோனா வைரஸ் நம்மை நெருங்காது. ஆனால் ஊரடங்கு உத்தரவு ஆங்காங்கே மீறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவை மீறியும், சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும் இருந்தால் பாதிக்கப்படுவது நாம்தான். எனவே அனைவரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக சமூக ஆர்வலர்களும், பல்வேறு தரப்பினரும், குழந்தைகளும், கலைஞர்களும் விழிப்புணர்வை சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தி வருகிறார்கள்.இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார் என பலரும் தற்போது கடுமையாக பணியாற்றி வருகிறார்கள்.

மேலும், தற்போது உள்ள சூழலில் போலீசாரும் தொடர்ந்து தங்களது குடும்பத்தினரையும் பிரிந்து பல்வேறு பகுதிகளில் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் ஒருவரின் 11 வயது மகள் துவாரகா பொதுமக்கள் வீட்டில் இருக்க வேண்டும் என அறிவுரை கூறும் வகையில் கைகளில் ஒரு விளம்பர பதாகையை ஏந்தியபடி ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளமான முகநூலில் அவரது தாயார் ஹேமா வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து ஹேமா கூறும்போது“எனது மகள் துவாரகா கூலிபாளையம் நால்ரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். தற்போது கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். எனது கணவரும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் எனது கணவர் வீட்டில் இருக்கும் நேரம் குறைந்து விட்டது.

எனவே எனது மகள் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுரை கூறும் வகையில் ஒரு விளம்பர பதாகை தயார் செய்தார்.அந்த பதாகையில் எங்க அப்பா போலீஸ் ஆபிசர், நீங்க எல்லாம் வீட்டில் பத்திரமாக இருங்க!, அப்ப தான் எங்க அப்பா சீக்கிரமாக வீட்டுக்கு வருவாரு... எனவும், செல்போனில் எனது கணவரது புகைப்படத்தையும் கைகளில் ஏந்தியபடி உள்ளார். இந்த புகைப்படத்தை நான் எனது முகநூலில் வெளியிட்டேன். தற்போது எனது மகளின் அதீத பாசம் பலரையும் கவர்ந்துள்ளது. இதன் காரணமாக விளம்பர பதாகையுடன் கூடிய எனது மகளின் புகைப்படத்தை பலரும் முகநூல் மற்றும் வாட்ஸ்-அப்புகளில் ஷேர் செய்ய தொடங்கினார்கள். தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனது மகளின் இந்த செயல் எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இதே போல் கருவம்பாளையம் பகுதியை சேர்ந்த 2-ம் வகுப்பு படிக்கும் மாணவன், முகமது ஹர்சத், கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பது எப்படி என்று விளம்பர பதாகையை வைத்துள்ளான்.

மேலும் செய்திகள்