திருப்பூரில் இருந்து ஒடிசாவுக்கு 5 ஆயிரம் முழுஉடற்கவசங்கள் - சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைப்பு

திருப்பூரில் இருந்து ரெயில் மூலமாக டாக்டர் கள் பயன்படுத்தும் 5 ஆயிரம் முழு உடற்கவசங்கள் ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2020-04-13 22:15 GMT
திருப்பூர், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவ உபகரணங்கள், உணவுப்பொருட்களை சரக்கு ரெயில் மூலமாக அனுப்பி வைக்கும் வகையில் ரெயில் சேவை நடக்கிறது. அதன்படி கோவை-சென்னைக்கு சரக்கு ரெயில் சேவை இயக்கப்படுகிறது.

மருத்துவ உபகரணங்கள், முககவசங்கள் உள்ளிட்ட சரக்குகளை ரெயில் மூலமாக அனுப்புவதற்கு தொழில்துறையினர் தொடர்பு கொள்ளலாம் என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்திருந்தனர். முககவசங்கள் திருப்பூரில் இருந்து தினமும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று காலை கோவையில் இருந்து சரக்கு ரெயில் புறப்பட்டு திருப்பூருக்கு 6 மணிக்கு வந்தது. திருப்பூரில் இருந்து 3 லட்சம் முககவசங்கள் நேற்று சென்னைக்கு ரெயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தம் 6 பண்டல்களில் இந்த முககவசங்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதுபோல் டாக்டர்கள் பயன்படுத்தும் முழு உடற்கவசங்கள், கையுறைகள், முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் 5 ஆயிரம் செட் ஒடிசா மாநில அரசுக்கு ரெயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. 

பல்லடத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தின் சார்பில் இவை தயாரிக்கப்பட்டு 130 பெட்டிகளில் திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. அவை ரெயில் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து ஒடிசாவுக்கு அனுப்புவதற்கு வசதி செய்யப்பட்டது. இதை திருப்பூர் ரெயில் நிலைய வணிக பிரிவு மேலாளர் முத்துக்குமார் தலைமையில் ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்