விழுப்புரம் நகருக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி சீட்டுடன் வந்த பொதுமக்கள் - ஒரே நபர் மறுபடியும் வருவதை தடுக்க வாகனங்களில் பெயிண்ட் பூசிய போலீசார்

விழுப்புரம் நகரில் அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதி சீட்டுடன் பொதுமக்கள் சென்றனர். ஒரே நபர் மறுபடியும் வருவதை தடுக்க வாகனங்களில் போலீசார், பெயிண்ட் பூசினர்.

Update: 2020-04-14 06:57 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 18 பேர் விழுப்புரம் நகரத்தை சேர்ந்தவர்கள் ஆவர். எனவே விழுப்புரம் நகரில் இந்நோய் பரவலை முற்றிலும் தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் நடமாட்டத்தை குறைக்கும் வகையிலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் நகரில் உள்ள 42 வார்டுகளுக்கும் வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாட்களுக்கு நீலம், சிவப்பு, பச்சை, மஞ்சள், ஊதா, வெள்ளை ஆகிய 6 வண்ணங்களில் அனுமதிச்சீட்டு வீடுகள்தோறும் வழங்கப்பட்டது.

அதாவது குடும்பத்திற்கு ஒரு அனுமதி சீட்டு மட்டுமே வழங்கப்பட்டது. வாரத்தில் ஒரு நாள் மட்டுமே அதுவும் ஒரு நபர் மட்டும் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை பெற்றுச்செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் திங்கட்கிழமையான நேற்று நீல நிறத்தில் உள்ள அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே அந்த அனுமதி சீட்டுடன் வீட்டை விட்டு வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை பெற்றுச்சென்றனர். அனுமதி சீட்டு இல்லாமல் வீட்டிலேயே மறந்து விட்டுவிட்டு வந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அனுமதி சீட்டு பெற்றவர்கள் அவர்களுக்கு குறிப்பிட்ட அந்த நாட்களில்தான் வெளியே வருகிறார்களா? என்பதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கண்காணித்ததோடு அவர்கள் மறுபடியும் வருவதை தடுக்க அவர்களது வாகனங்களில் அடையாளத்திற்காக நீல நிற பெயிண்டை பூசினார்கள்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறுகையில், மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிற நிலையில் அந்த உத்தரவை மீறியதற்காக இதுவரை 3,174 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இவர்களிடமிருந்து 2,356 இருசக்கர வாகனங்கள், 49 ஆட்டோக்கள், 32 கார்கள் ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம் நகரில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வருபவர்களுக்கு அனுமதி சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் (நேற்று) பொருட்களை வாங்க வந்தவர்கள் இனி அடுத்த வாரம் திங்கட்கிழமைதான் வெளியே வர வேண்டும். அதற்கு முன் மீண்டும் வெளியே வந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். கிராமப்புற மக்களுக்கு அந்தந்த கிராமங்களிலேயே அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே இனி யாரும் கிராமப்புறங்களில் இருந்து விழுப்புரம் நகருக்குள் வருவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்