பாலக்கோடு ஒன்றியத்தில் 12 அரசு மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் கண்டறியும் கருவிகள் - அமைச்சர் வழங்கினார்

பாலக்கோடு ஒன்றியத்தில் 12 அரசு மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் கண்டறியும் கருவிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

Update: 2020-04-16 05:01 GMT
பாலக்கோடு,

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 12 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சல் கண்டறியும் கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு தெர்மல் ஸ்கேன், கிருமிநாசினிகள், முககவசம், டாக்டர்களுக்கு முழு கவச உடை ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கூறுகையில், வெளிநாடுகளில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வந்தவர்களில் 147 பேரும், வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வந்தவர்களில் 9,865 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். 50 பேருக்கு ஒரு மருத்துவக்குழு வீதம் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையத்தில் 3 நாட்களில் 233 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அறிவித்துள்ள மே 3-ந்தேதி வரையிலான ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக கொரோனா வைரஸ் தடுப்பு கண்காணிப்பு பணிக்காக காடுசெட்டிப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியை அவர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சிகளில் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைதலைவர் நாகராஜன், மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் ரங்கநாதன், கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன், கவுரி, பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, கூட்டுறவு வீட்டுவசதி தலைவர் சங்கர், வட்டார மருத்துவ அலுவலர் சசிரேகா, தாசில்தார் ராஜா உள்பட அதிகாரிகள், அரசு டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்