ஸ்ரீவைகுண்டத்தில் ஊரடங்கை மீறி போராட்டம்; 50 பேர் மீது வழக்கு - கடைக்கு ‘சீல்’ வைப்பு

ஸ்ரீவைகுண்டத்தில் ஊரடங்கை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஊரடங்கில் செயல்பட்ட கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

Update: 2020-04-18 22:30 GMT
ஸ்ரீவைகுண்டம், 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் மேடை பிள்ளையார் கோவில் அருகில் மிக்சி பழுது பார்க்கும் கடை நடத்தி வந்த மரைக்காயர் நேற்று முன்தினம் ஊரடங்கை மீறி, தனது கடையை திறந்து வேலை செய்தார்.

அப்போது அங்கு ரோந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரென்னிஸ், மரைக்காயரிடம் கடையை மூடுமாறு அறிவுறுத்தினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த அனைத்து வியாபாரிகள் சங்கத்தினரும் மரைக்காயருக்கு ஆதரவாக பேசினர். பின்னர் அவர்கள், ஸ்ரீவைகுண்டம் நகர பஞ்சாயத்து அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

50 பேர் மீது வழக்கு

உடனே அங்கு சென்ற போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாகவும், தொற்று நோய் பரவும் வகையில், சட்ட விரோத போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்க துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், மரைக்காயர் உள்பட 50 பேர் மீது ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடைக்கு ‘சீல்’ வைப்பு

இதற்கிடையே ஸ்ரீவைகுண்டம் மேடை பிள்ளையார் கோவில் அருகில், ஊரடங்கை மீறி செயல்பட்ட மிக்சி பழுது பார்க்கும் கடைக்கு தாசில்தார் சந்திரன் தலைமையில் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

மேலும் செய்திகள்