அமராவதி அணை நீர்மட்டம் சரிவு; குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

அமராவதி அணையின் நீர்மட்டம் சரிவால் குடிநீர்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-04-22 23:15 GMT
தளி, 

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. வனப்பகுதிகளில் உற்பத்தியாகின்ற ஆறுகளை ஆதாரமாகக் கொண்ட இந்த அணைக்கு மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. பருவகாலங்களில் ஏற்படும் நீர்வரத்தையும் அன்றைய நிலையில் அணையில் உள்ள நீர்இருப்பை கொண்டும் பாசன நிலங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது.

அதைத்தொடர்ந்து விவசாயிகள் நிலங்களை உழுது நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். தென்னை சாகுபடி பரவலாக நடைபெற்றாலும் கூட அமராவதிஅணை பாசனத்தில் நெல் சாகுபடியே பிரதானமாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சிமலையில் பருவமழை தீவிரமடைந்தது. இதன்காரணமாக அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அமராவதிஅணைக்கு தொடர் நீர்வரத்து இருந்து வந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழுகொள்ளளவை நெருங்கியது.

அதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி அமராவதி அணையில் இருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து மடத்துக்குளம் அமராவதி கல்லாபுரம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல் அறுவடையும் நடந்து முடிந்து விட்டது. இந்த சூழலில் பருவமழைக்கு பின்பு அணையின் நீரா தாரங்களில் மழை பெய்யவில்லை. மாறாக கடும் வறட்சி நிலவி வந்தது.

இதனால் அணைக்கு ஆறுகள் மூலமாக வந்து கொண்டிருந்த நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நின்று விட்டது. மறுபுறம் பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீர்இருப்பும் சரிந்து விட்டது. அதன் பின்பு நீர்வரத்து இல்லாதலால் நீர்மட்டம் உயருவதற்கான வாய்ப்புகள் ஏற்படவில்லை.

அணைப்பகுதி மணல் திட்டுகளாகவும், பாறைகளாகவும் வறண்ட நிலமாகவும் காட்சி அளிக்கிறது. மேலும் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்