சீராக குடிநீர் வழங்கக்கோரி சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

சீராக குடிநீர் வழங்கக்கோரி சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-04-22 22:15 GMT
துடியலூர்,

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் எம்.ஜி.ஆர்.நகரில் 300-க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக வாரத்துக்கு ஒரு முறையும், அதன் பின்னர் 15 நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்போது 19 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் எம்.ஜி.ஆர்.நகர் பகுதிக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடித்து, அனைவரும் 1 மீட்டர் இடைவெளிவிட்டு நின்று கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அதே இடத்தில் தரையில் அமர்ந்து குடிநீர் வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி என்ஜினீயர் ரங்கராஜ், கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்