நகர பகுதியில் மிதமான மழை மக்கள் மகிழ்ச்சி

புதுச்சேரியில் நேற்று மிதமான மழை பெய்தது. இதனால் பகல் முழுவதும் இதமான சூழல் நிலவியது.

Update: 2020-04-27 03:26 GMT
புதுச்சேரி,

கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் புதுவையில் கடந்த சில நாட்களாக வெயில் மக்களை வறுத்து எடுத்து வருகிறது. காலை 10 மணிக்கு மேல் மாலை 5 மணி வரை வீட்டை விட்டு வெளியே வந்து நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொது மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். வெயிலின் கொடுமை காரணமாக அவர்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். மாலை நேரங்களில் வீட்டின் மொட்டைமாடியில் குடும்பத்துடன் காற்று வாங்கி, பொழுதை கழிக்கின்றனர்.

மிதமான மழை

இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில நாட்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று அதிகாலையில் லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் காலை 9 மணிக்கு மேல் சற்று மிதமான மழை பெய்தது. இந்த மழை சுமார் 30 நிமிடம் நீடித்தது. பின்னர் 11 மணி வரை தூறல் மழையாக பெய்தது. இதனால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் வில்லியனூர், பாகூர், அரியாங்குப்பம் உள்பட கிராம பகுதியிலும் பரவலாக மழை கொட்டியது. ஊரடங்கால் காலை நேரத்தில் பொருட்கள் வாங்க வந்தவர்கள், மழையில் நனைந்தபடி சென்றனர்.

இந்த திடீர் மழை காரணமாக நேற்று பகல் முழுவதும் புதுவையில் இதமான சூழல் நிலவியது. வானில் கருமேகங்கள் திரண்டு சென்றது ரம்மியமாக இருந்தது.

மேலும் செய்திகள்