இருசக்கர வாகனத்தில் ஒருவருக்கு மேல் சென்றால் வாகனம் பறிமுதல்: அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் இருசக்கர வாகனத்தில் ஒருவருக்கு மேல் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.

Update: 2020-04-27 23:30 GMT
எலச்சிபாளையம், 

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியத்தில் எலச்சிபாளையம், பெரியமணலி ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் மின்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளுக்கு பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 10 ரூபாய் மதிப்புள்ள முககவசம் அணியாமல் 100 ரூபாய் அபராதம் செலுத்துகிறார்கள்.

மேலும் கட்டுப்பாட்டை அதிகரிக்க நாளை (இன்று) முதல் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும். 2 பேர் சென்றால் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். அதை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. இதே நிலை நீடிக்க வேண்டும் என்பதால் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கோடைக்கால தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு தமிழகத்தில் மின்சார உற்பத்தி உள்ளது. எனவே மின்வெட்டு இருக்காது. இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

மேலும் செய்திகள்