ரேஷன் அரிசியுடன் வந்து போராட்டம் நடத்திய பொதுமக்கள்: தரமில்லாத பொருட்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு

ரேஷன் கடை மூலம் கொடுத்த நிவாரண பொருட்கள் தரமில்லாமல் வழங்கப்பட்டதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2020-04-28 23:45 GMT
ஈரோடு,

ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சி கரட்டாங்காடு பகுதியில் ஏழை, தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அன்றாடம் கூலி வேலைக்கு சென்று தங்கள் குடும்பத்தை கவனித்து வந்த இவர்களுக்கு ஊரடங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஊரடங்கு நேரத்தில் வேலை இல்லை. செலவு செய்ய பணம் இல்லை என்ற நிலையில் நேற்று இவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கடந்த 30 நாட்களாக எந்த ஒரு வருவாயும் இன்றி தவித்து வருகிறோம். எங்களுக்கு வேலை வாய்ப்பு அல்லது வருவாய்க்கு ஏற்பாடு செய்ய வேண்டும். எங்கள் குழந்தைகளுக்கு பால் வாங்கக்கூட வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறோம் என்று கண்ணீர் மல்க கூறினார்கள். அதற்கு அதிகாரிகள் தமிழக அரசு ரேஷன் கடைகளில் இலவசமாக நிவாரண பொருட்கள் வழங்குவது குறித்தும், குடும்பத்துக்கு ரூ.1,000 வழங்கியதையும் கூறினார்கள்.

அதற்கு அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் இருந்து ரேஷன் அரிசியை கொண்டு வந்து அதிகாரிகளிடம் காட்டினார். மேலும், இந்த அரிசி தரமில்லாமல் உள்ளது. மற்ற பொருட்களும் இப்படித்தான் உள்ளது. இதை எப்படி சமைத்து சாப்பிடுவது. ரூ.1,000 எத்தனை நாளைக்கு போதுமானதாக இருக்கும். இங்கு ரேஷன் கார்டு இல்லாத குடும்பங்களும் உள்ளன. அவர்கள் சாப்பிட என்ன செய்வார்கள் என்று கேட்டனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பால் வழங்கவும், தேவையான உணவுப்பொருட்களை தாமதமின்றி வழங்கவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்