வெலிங்டன் நீர்த்தேக்க பகுதியில் இருந்த மரங்களை வெட்டி லாரியில் கடத்த முயற்சி

வெலிங்டன் நீர்த்தேக்க பகுதியில் இருந்த மரங்களை வெட்டி லாரியில் கடத்த முயற்சி அடுத்தடுத்த போராட்டங்களால் பரபரப்பு.

Update: 2020-04-28 21:40 GMT
திட்டக்குடி,

திட்டக்குடி அருகே இடைச்செருவாய் பகுதியில் வெலிங்டன் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் அமைந்துள்ள இந்த நீர்தேக்கத்துக்கு அருகே பல ஏக்கர் நிலம் உள்ளது. இதில் கருவேல மரங்கள் அதிகளவில் உள்ளன. இங்கிருந்த மரங்களை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர் வெட்டியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த அந்த பகுதியை பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது அதிகாரிகள் சரியான பதிலை அளிக்கவில்லை. மரங்களை வெட்டியநபர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதற்கிடையே அங்கு வெட்டப்பட்ட மரங்களை இரவில் லாரியில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர். இதுபற்றி அறிந்த போராட்டக்காரர்கள் அந்த லாரியையும் இரவில் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தார். மேலும், அந்த லாரியை பறிமுதல் செய்து, தாலுகா அலுவலகத்துக்கு அதிகாரிகள் எடுத்து சென்றனர். மரங்களை வெட்டிய மர்ம நபர்கள் யார்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்