சேலத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 3,085 பேர் மீது வழக்கு: 2 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

சேலம் மாநகரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3,085 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Update: 2020-04-29 22:45 GMT
சேலம், 

சேலம் மாநகர பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள் தங்கதுரை, செந்தில் ஆகியோர் மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 4 நாட்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் சாலைகளில் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் நேற்று காலை வழக்கம்போல் சாலைகளில் வாகனங்கள் அதிகளவில் சென்று வந்ததை காண முடிந்தது.

ஏனென்றால் முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே சென்றனர். இருந்தபோதிலும் காலை 10 மணிக்கு மேல் ஊரடங்கை மீறி வெளியில் சென்ற வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன் தலைமையில் போலீசார் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது என்றும், வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் கூறி அறிவுறுத்தினார்.

இதுகுறித்து துணை கமிஷனர் தங்கதுரை நிருபர்களிடம் கூறுகையில், சேலம் மாநகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து இதுவரை 3 ஆயிரத்து 85 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரசை கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்ப்பது நல்லது. முககவசம் அணியாமல் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரக்கூடாது, என்றார்.

மேலும் செய்திகள்