ரேஷன் அரிசி வேண்டாம்: தரமான அரிசி வழங்கக்கோரி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் - பல்லடத்தில் பரபரப்பு

ரேஷன் அரிசி வேண்டாம், எங்களுக்கு நல்ல தரமான அரிசியை வழங்குங்கள் என்று அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-04-30 23:15 GMT
பல்லடம், 

பல்லடம் நகராட்சி பாரதிபுரத்தில் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிவாரண உதவி கிடைக்கவில்லை என்று கூறி நேற்று முன்தினம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதையடுத்து நேற்று காலை வருவாய்த்துறை சார்பில் 15 கிலோ ரேஷன் அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் எண்ணெய் ஆகியவற்றை கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விட்டு கலெக்டர் அலுவலகம் புறப்பட்டு சென்று விட்டார். இதற்கிடையில் வருவாய்த்துறை சார்பில் கொடுக்கப்பட்ட ரேஷன் அரிசியை பார்த்த பொதுமக்கள் சிலர், அந்த ரேஷன் அரிசி தரம் குறைவாக இருப்பதாகவும், இந்த அரிசி வேண்டாம், தரமான அரிசி தான் வேண்டும் என்று கூறி அந்த அரிசி பைகளை மட்டும் திருப்பி கொடுத்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பொதுமக்களிடம் மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல், தாசில்தார் சிவசுப்பிரமணியம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் பிடிவாதமாக ரேஷன் அரிசி வேண்டாம் என்று கூறினர். இதற்குள் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்த 5 கிலோ அரிசிப்பைகளும் அங்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து பொதுமக்களுக்கு அந்த 5 கிலோ அரிசி பைகள் வழங்கப்பட்டது. இந்த 5 கிலோ அரிசி பையையும், ஏற்கனவே வருவாய்த்துறை சார்பில் வழங்கப்பட்ட அரிசியையும் பொதுமக்கள் எடுத்து சென்றனர். ஆனால் ஒரு சிலர் மட்டும் வருவாய்த்துறை சார்பில் வழங்கப்பட்ட அரிசியை வேண்டாம் என்று கூறி சென்று விட்டனர்.

மேலும் செய்திகள்