தெலுங்கானாவில் இருந்து சின்னசேலத்துக்கு சரக்கு ரெயிலில் 2,570 டன் அரிசி வந்தது

தெலுங்கானாவில் இருந்து சின்ன சேலத்துக்கு சரக்கு ரெயிலில் நேற்று 2,570 டன் அரிசி வந்தது.

Update: 2020-05-01 22:13 GMT
சின்னசேலம்,

கொரோனா நிவாரண திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக மத்திய அரசு சார்பில் இந்திய உணவு கழகம் மூலம் தமிழகத்துக்கு சரக்கு ரெயிலில் அரிசி அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 3 சரக்கு ரெயில்களில் சின்னசேலத்துக்கு அரிசி கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் 4-வது முறையாக நேற்று தெலுங்கானா மாநிலம் நெல் குண்டா பகுதியில் இருந்து 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலில் 51 ஆயிரத்து 700 மூட்டை(2 ஆயிரத்து570 டன்) புழுங்கல் அரிசி சின்ன சேலம் ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.

கிருமிநாசினி தெளிப்பு

இதையடுத்து சரக்கு ரெயில் பெட்டிகள் மற்றும் அரிசி மூட்டைகளை ஏற்றிச்செல்ல வந்த லாரிகள் மீது பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ராஜா தலைமையில் ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.

இதனைத் தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்புடன் சரக்கு ரெயில் பெட்டிகளில் இருந்து அரிசி மூட்டைகளை இறக்கி லாரிகளில் ஏற்றி சின்னசேலம் கூகையூர் சாலையில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கொண்டு சென்றனர்.

4 மாவட்டங்களுக்கு..

இந்த பணியை இந்திய உணவுக் கழக மேலாளர் வெங்கடாஜலம், உதவியாளர் திருநீலகண்டன், சேமிப்பு கிடங்கு மேலாளர் பழனியப்பன், ரெயில்நிலைய அதிகாரி சவுத்ரி, ஒப்பந்ததாரர் தியாகராஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இது பற்றி அதிகாரிகள் கூறுகையில், கொரோனா நிவாரணத் திட்டத்தின் கீழ் பொது வினியோக திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக இந்த அரிசி மூட்டைகள் கடலூர், விழுப்புரம், சேலம் மற்றும் சின்னசேலத்தை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்