மதுரையில் மின்சாரம் தாக்கி டிரைவர் சாவு; தகர கதவை மாடிக்கு தூக்கிய போது பரிதாபம்

மதுரையில் மின்சாரம் தாக்கி டிரைவர் பலியானார். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகர கதவை கயிறு கட்டி மாடிக்கு தூக்கிய போது இந்த பரிதாபம் நேர்ந்தது.

Update: 2020-05-02 23:30 GMT
மதுரை, 

மதுரை நரிமேடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 32), டிரைவர். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் 3-வது மாடியில் வசித்து வந்தார். அவரது வீட்டின் கழிப்பறை கதவில் பழுது ஏற்பட்டது. அதை சரி செய்து தருமாறு வீட்டின் உரிமையாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் நீங்களே கதவை சரி செய்து கொண்டு, அந்த பணத்தை வாடகையில் கழித்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

எனவே திருப்பதி நேற்று தச்சு தொழிலாளிகள் மனோகரன்(59), பழனிசாமி(55) ஆகியோரை அழைத்து கதவை சரிசெய்து தருமாறு கூறினார். அவர்கள் வீட்டின் கீழே வைத்து தகரத்தினால் ஆன கதவை செய்தனர். பின்னர் அதனை மாடி வீட்டிற்கு படி வழியாக கொண்டு செல்ல முடியாத காரணத்தினால் கீழே இருந்து கயிறு கட்டி மேலே தூக்க முடிவு செய்தனர்.

அதன்படி திருப்பதி, அவருடைய மாமனார் பாண்டி (60) மற்றும் தச்சு தொழிலாளிகள் 2 பேர், என 4 பேர் சேர்ந்து கதவை கயிறு கட்டி மாடிக்கு தூக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற மின்சார ஒயர் மீது எதிர்பாராதவிதமாக தகர கதவு பட்டது. அதில் இருந்து மின்சாரம் தாக்கி 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவர்கள் 4 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது திருப்பதி ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது. மற்ற 3 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் பலியான திருப்பதிக்கு திருமணம் முடிந்து 5 மற்றும் 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்