கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து கோவையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் குழு ஆய்வு

கொரோனா தடுப்பு மற்றும் பொதுமக்களுக்கான நிவாரண பணிகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு கோவையில் ஆய்வு செய்தது.

Update: 2020-05-02 22:41 GMT
கோவை,

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட 141 பேரில் 132 பேர் குணமடைந்துவிட்டனர். மீதம் உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதைத்தொடர்ந்து சிவப்பு மண்டலத்தில் இருந்த கோவை ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறி உள்ளது. இதையடுத்து ஊரடங்கு நீட்டித்தாலும் கோவை மாவட்டத்தில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட உள்ளன.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு மற்றும் பொதுமக்களுக்கான நிவாரண பணிகள் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சரவணவேல், கஜலட்சுமி ஆகியோர் நேற்று கோவை வந்து பல்வேறு இடங்களை பார்வையிட்டனர். கோவை ராமநாதபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்ட அவர்கள், அங்கு தினமும் எத்தனை பேருக்கு உணவு அளிக்கப்படுகிறது?, வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறதா? உணவு தரமாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர். இதேபோல் கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் காற்கறி சந்தையும் ஐ.ஏ.எஸ். குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகள்

மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத், துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி, மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் சந்தோஷ்குமார் உள்பட பலரும் இந்த ஆய்வின்போது உடன் இருந்தனர். ராமநாதபுரம் அம்மா உணவகத்தில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு இலவசமாக உணவளிக்கப்படுவதாகவும், வடமாநில தொழிலாளர்கள் மற்றும் சேலம், நாமக்கல் உள்பட வெளிமாவட்ட தொழிலாளர்கள் உள்பட பலரும் இங்கு சாப்பிட வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதேபோல் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள், கிருமி நாசினி தெளிக்கும் பணி, மருத்துவ மற்றும் நிவாரண உதவிகளையும் பார்வையிட்டனர். பின்னர் மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத் உள்பட கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். கொரோனாவை முற்றிலும் குணப்படுத்தி பசுமை மண்டலத்துக்கு மாறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்