மன்னார்குடியில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவி போலீசாருக்கு, பொதுமக்கள் பாராட்டு

மன்னார்குடியில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவிய போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.

Update: 2020-05-02 23:47 GMT
மன்னார்குடி, 

மன்னார்குடியில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவிய போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.

பிரசவ வலி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து மதுக்கூர் செல்லும் சாலை பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். தூய்மை பணியாளரான இவருடைய மனைவி லதா(வயது 21). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த லதாவுக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வாகன போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ள நிலையில் லதாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து உறவுக்கார பெண்கள் 2 பேர் லதாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு நடைபயணமாக புறப்பட்டனர்.

போலீசார் உதவி

அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் கார்த்திகேயன், பிரகாஷ், வினோத்ராஜா ஆகியோர் பிரசவ வலியால் லதா துடித்துக்கொண்டு இருப்பதை பார்த்தனர். இதையடுத்து அவருக்கு உதவ முன்வந்த போலீசார் அவரையும், அவருடன் வந்த 2 பெண்களையும் தங்களுடைய காரில் ஏற்றினர். பின்னர் மன்னார்குடி நகர பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் லதாவை அனுமதித்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

பொதுமக்கள் பாராட்டு

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவிய இந்த சம்பவம் காவல் துறையில் பணியாற்றுபவர்களின் நெஞ்சிலும் ஈரம் உண்டு என்பதை நிரூபித்துள்ளது. அவசர காலத்தில் கர்ப்பிணிக்கு உதவிய போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்