நிதி ஆதாரம் கடும் பாதிப்பு: மத்திய அரசு மாநிலங்களுக்கும், மக்களுக்கும் உதவிட வேண்டும் நாராயணசாமி வேண்டுகோள்

புதுவை மாநிலத்தின் நிதி ஆதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் தேவையான நிதி உள்ளது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு மாநிலங்களுக்கும், மக்களுக்கும் உதவிட வேண்டும் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-05-03 00:05 GMT
புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தொற்றினால் புதுச்சேரியில் 3 பேரும், மாகியில் ஒருவரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் 2,157 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நான் பிரதமரிடம் வலியுறுத்தினேன்.

அதைத்தொடர்ந்து ரெயில் மூலம் அவர்களை அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்கான செலவை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. தொழிலாளர்களை கட்டணமின்றி ரெயிலில் ஏற்றி செல்ல வேண்டும் என்று பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகளை வழங்க சுகாதாரத் துறைக்கு கூறி உள்ளேன். நாளை (திங்கட்கிழமை) முதல் அந்த மாத்திரைகள் வழங்கப்படும். வாரணாசியில் தவித்த புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 22 பேர் நேற்று புதுச்சேரிக்கு புறப்பட்டனர். இதேபோல் மத்திய பிரதேசத்தில் தவிக்கும் மாணவிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் வசிக்கும் பலரும் புதுச்சேரிக்கு திரும்ப அரசு தொடங்கியுள்ள புதிய இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களையும் மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆரஞ்சு மண்டலம்

மத்திய அரசு வைரஸ் தொற்றினை கணக்கில் கொண்டு சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று மண்டலங்களாக பிரித்து உள்ளது. புதுச்சேரி ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளது. இதன்படி ஆரஞ்சு, பச்சை மண்டலத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள், கடைகள் திறக்க அனுமதி அளிக்கலாம் என்பது தொடர்பாக நாளை (அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை) நடை பெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளோம்.

இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்பதால் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் சிரமமின்றி செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு 3 மாதங்களுக்கான இலவச அரிசி மட்டும் வழங்கி உள்ளது. மற்றபடி நிதி ஆதாரம் எதுவும் வழங்கவில்லை. நாங்கள் மாநில வருமானத்தை கொண்டு மக்களுக்கான உதவிகளை செய்து வருகிறோம். இப்போது மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க கோப்பு தயாராகிறது.

நிதி ஆதாரம் பாதிப்பு

முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.7 கோடிக்கு மேல் நிதி வந்துள்ளது. இதனை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்க பயன் படுத்துவோம். வசதி படைத்தவர்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும். ஏனென்றால் மாநிலத்தின் நிதி ஆதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு இடையே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட்டுள்ளோம். மத்திய அரசிடம் தேவையான நிதி உள்ளது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும், மக்களுக்கும் உதவிட வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்