குடிநீர் வழங்காததால் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை

குடிநீர் வழங்காததால் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை.

Update: 2020-05-03 04:42 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் நகராட்சி அபாய்தெரு, திருநீலகண்டர் தெரு, புட்டப்பானர்தெரு, ஜார்ஜ்பேட்டை, வேணுகோபால்சாமி தெரு ஆகிய பகுதிகளில் 2 மாதங்களாக சரியாகக் குடிநீர் வரவில்லை எனக்கூறப்படுகிறது. நேற்று 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முன்னாள் கவுன்சிலர் டி.சந்திரசேகர் தலைமையில் காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, குடிநீர் கேட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், கொரோனா தொற்றுக்காக தினமும் 15 முறை கைகழுவ வேண்டும் என அரசு கூறுகிறது. ஆனால் எங்களுக்கு குடிக்கவே குடிநீர் கிடைக்கவில்லை. உப்புத்தண்ணீரை வினியோகம் செய்தார்கள். அந்தத் தண்ணீரும் தற்போது வரவில்லை. பலமுறை நகராட்சியில் எடுத்துக்கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோடை வெயிலின் தாக்கத்தால் குடிநீர் தேவை அதிகமாகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் எங்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தரவில்லை என்றால் அடுத்த கட்டமாக நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்களை திரட்டி மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.

இதையடுத்து பெண்கள், நகராட்சி ஆணையாளரை சந்திக்க முயன்றபோது, ஆணையாளர் அவர்களை சந்திக்க மறுத்து விட்டார். பின்னர் அங்கிருந்த நகராட்சி பொறியாளரை சந்திக்கக் கூறியதன்பேரில் அவர்களை சந்தித்தபோது, பெண்களிடம் அவர், விரைவில் குடிநீர் வினியோகம் செய்வதாகக் கூறியதால் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அப்பகுதி பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்