கடலூரில் இருந்து புதுச்சேரி செல்ல தடை வாகனங்கள் திருப்பி அனுப்பி விடப்பட்டன

கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற வாகனங்கள் அனைத்தும் திருப்பி விடப்பட்டன.

Update: 2020-05-04 21:45 GMT
கடலூர்,

புதுச்சேரி மாநிலத்தில் மது மற்றும் சாராய கடைகளை தவிர மற்ற கடைகள் திறக்கப்படும் என்று அந்த மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். இருப்பினும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுச்சேரி மாநிலத்திற்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டார். இதன்படி நேற்று அந்த மாநில எல்லை பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தையொட்டி உள்ள புதுச்சேரி மாநிலத்திற்கு மருத்துவமனைகள், கூலி வேலைக்கு அதிகம் பேர் சென்று வந்தனர்.

திருப்பி அனுப்பினர்

ஆனால் அந்த தடை உத்தரவால் நேற்று கடலூரில் இருந்து சென்ற வாகன ஓட்டிகளை அந்த மாநில போலீசார் முள்ளோடையில் திருப்பி அனுப்பி விட்டனர். இதேபோல் கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடி, சின்னகங்கணாங்குப்பம் ஆகிய சோதனைச்சாவடிகளிலும் போலீசார் நின்று, புதுச்சேரி மாநிலத்திற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினர். இருப்பினும் ஒரு சிலர் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி கார், இரு சக்கர வாகனங்களில் சென்றனர். அவர்களை முள்ளோடையில் புதுச்சேரி போலீசார் தடுத்து நிறுத்தி கடலூருக்கு திருப்பி அனுப்பி விட்டனர். தவிர்க்க முடியாத காரணத்தால் மருத்துவமனைக்கு சென்ற ஒரு சிலரை மட்டுமே போலீசார் புதுச்சேரி மாநிலத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.

மேலும் செய்திகள்