ஸ்ரீரங்கத்தில் திறக்கப்பட்ட பூக்கடைகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டதால் பரபரப்பு

ஸ்ரீரங்கத்தில் திறக்கப்பட்ட பூக்கடைகளை அதிகாரிகள் மூட உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-06 03:00 GMT
ஸ்ரீரங்கம், 

ஸ்ரீரங்கத்தில் திறக்கப்பட்ட பூக்கடைகளை அதிகாரிகள் மூட உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பூ சந்தை

ஸ்ரீரங்கம் சாத்தார வீதியில் உள்ள பூ சந்தையில் 70-க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை பூ கடைகள் உள்ளன. ஊரடங்கு உத்தரவால் கடந்த 43 நாட்களாக பூ சந்தை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள தேவி பள்ளி மைதானத்தில் பூ சந்தை இயங்க அனு மதிக்கப்பட்டிருந்தது.

நேற்று முதல் ஏ.சி. இல்லாத கடைகள் இயங்கலாம் என அரசு உத்தரவிட்டது. ஆனால் ஸ்ரீரங்கம் சாத்தார வீதியில் உள்ள பூ சந்தையில் ஒரு சில வியாபாரிகள் நேற்று முன் தினமே கடைகளை திறந்தனர். இதையடுத்து நேற்று மற்ற வியாபாரிகளும் அப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட கடைகளை திறந்தனர்.

மூட உத்தரவு

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ஸ்ரீரங்கம் தாசில்தார் ஸ்ரீதர் மற்றும் போலீசார் அனுமதி இல்லாமல் கடையை திறக்க கூடாது என உத்தரவிட்டனர். அப்போது வியாபாரிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு, நாங்கள் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக வாழ்வாதாரம் இழந்து நிற்கிறோம். சிறிய கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே சாதாரண பூக்கடைகளை மூடச்சொல்வதை ஏற்கமுடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு அதிகாரிகள், இந்த சந்தை மாநகராட்சி கட்டுப்பாட்டில் வருவதால் மாநகராட்சி அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று நடத்தலாம் என தாசில்தார் மற்றும் போலீசார் கூறினர். பின்னர் 20-க்கும் மேற்பட்ட பூவியாபாரிகள் மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்திற்கு சென்று பூச்சந்தையை திறக்க அனுமதி கோரி மாநகராட்சி உதவி ஆணையர் வைத்தியநாதனிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட உதவி ஆணையர் வைத்தியநாதன் இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் ஸ்ரீரங்கம் தாசில்தார் ஆகியோரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து பூவியாபாரிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்