மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க ஆயத்தம் சமூக விலகல் வட்டம், தடுப்புகள் அமைப்பு

திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கான ஆயத்தமாக சமூக விலகல் வட்டம், தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Update: 2020-05-06 03:33 GMT
திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கான ஆயத்தமாக சமூக விலகல் வட்டம், தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக்

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடம் (பார்) அனைத்தும் மூடப்பட்டன. அதன்படி திருச்சி மாநகரில் மட்டும் 54 மதுக்கடைகளும், புறநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கடைகளும் மூடப்பட்டன. தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக மதுக்கடைகள் மூடப்பட்டதால், மதுப்பிரியர்கள் பெரும் அவதி அடைந்தனர்.

மது இல்லாததால் பலர், புகையிலை, பான்பராக் உள்ளிட்ட போதைக்கும், எங்கே அதிகவிலைக்கு கள்ளத்தனமாக மது விற்கப்படுகிறது என அலசி தேடத்தொடங்கி விட்டனர். கிராமப்புறங்களில் சாராயம் காய்ச்சும் தொழில் தலைதூக்கியது. மேலும் சில இடங்களில் மதுக்கடைகளை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு சம்பவம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் டாஸ்மாக் மதுக்கடையில் உள்ள பாட்டில்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டப்பட்டது.

மண்டபத்தில் பூட்டி சீல் வைப்பு

அதன்படி, புறநகர் பகுதியில் உள்ள மதுக்கடை பாட்டில்கள் மணிகண்டம் பகுதியிலும், திருச்சி மாநகரில் உள்ள கடைகளின் மதுபாட்டில்கள் கலையரங்கம் பழைய திருமண மண்டபத்திலும் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன. திருச்சி மாநகரில் உள்ள 54 கடைகளிலும் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான மதுப்பாட்டில்கள் தேக்கம் அடைந்தன. பீர் போன்ற மதுபாட்டில்கள் காலாவதி ஆகி இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. எனவே, எப்படி கணக்கில் எடுக்கப்போகிறார்கள்? என டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஆயத்தம்

இதற்கிடையே தமிழகத்தில் சென்னையை தவிர, அனைத்து மாவட்டங்களில் நாளை (வியாழக்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து மது விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி கடைகள் இயங்கும். கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மது இல்லாமல் அவதிப்பட்டவகள், நாளை கடைகள் திறக்கும்வேளையில் கூட்டமாக வந்து அலைமோதக்கூடும். எனவே, மதுப்பிரியர்கள் சமூக விலகலை கடைப்பிடித்து வரிசையாக வாங்கிச்செல்லும் வகையில் சமூக விலகலுக்கான வட்டம் நேற்று திருச்சி மாநகரில் உள்ள அனைத்து மதுக்கடைகள் முன்பு போடப்பட்டது. மேலும் தள்ளு முள்ளு ஏற்படாத வகையில் மரத்தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் ஏற்கனவே, மண்டபத்தில் பாதுக்காப்பாக வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்கள் இன்று (புதன்கிழமை) சம்பந்தப்பட்ட கடைகளுக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்