களியக்காவிளை எல்லையில் பரபரப்பு: தடையை மீறி தகவல் உதவி மையம் திறப்பு 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 17 பேர் கைது

தமிழக- கேரள எல்லையான களியக்காவிளையில் தடையை மீறி தகவல் உதவி மையம் திறந்த 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-05-07 01:09 GMT
களியக்காவிளை, 

தமிழக- கேரள எல்லையான களியக்காவிளையில் தடையை மீறி தகவல் உதவி மையம் திறந்த 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொரோனா ஊரடங்கு

கொரோனா பரவுவதை தடுக்க மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். தற்போது மூன்றாம் கட்டமாக வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சில கட்டுப்பாடுகளும் தளர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெங்களூரு, சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் பணிபுரியும் கேரள மாநில மக்கள் தங்கள் குடும்பங்களுடன் சொந்த ஊர்களுக்கு அரசு வழங்கும் அனுமதி சீட்டுடன் புறப்படுகிறார்கள். இவர்கள் குமரி மாவட்டம் களியக்காவிளை வழியாக செல்லும் போது பணியில் இருக்கும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி வருவதாகவும், சிலர் முறையாக அனுமதி பெறாமல் செல்வதாகவும் குற்றசாட்டு எழுந்தது.

தகவல் உதவி மையம்

மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள நோயாளிகள் கேரளாவிற்கு சிகிச்சைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய பிரச்சினைகளில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் களியக்காவிளையில் தகவல் உதவி மையம் அமைக்க காங்கிரசார் முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று களியக்காவிளை சோதனை சாவடி அருகே தகவல் உதவி மையம் அமைத்து பணிகளை தொடங்கினர். இந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கைது

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது அரசியல் கட்சியோ, தொண்டு நிறுவனமோ, தனி நபர்களோ தகவல் உதவி மையம் தொடங்க முடியாது. எனவே, தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், விளவங்கோடு தாசில்தார் ராஜ் மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று தகவல் மையத்தை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என காங்கிரசாரிடம் கூறினர். அதற்கு, காங்கிரசார் மறுப்பு தெரிவித்தனர். இதனால் காங்கிரசாருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தடையை மீறி தகவல் உதவி மையம் திறந்ததாக எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் சாமுவேல் ஜார்ஜ், மாவட்ட பொது செயலாளர்கள் ரவிசங்கர், சுரேஷ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், மோகன்தாஸ் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்து படந்தாலுமூட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

வசந்தகுமார் எம்.பி.

இதுகுறித்து தகவல் அறிந்த எச்.வசந்தகுமார் எம்.பி. படந்தாலுமூட்டில் உள்ள மண்டபத்திற்கு நேரில் சென்று கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து பேசினார். இதனை அறிந்த காங்கிரஸ் கட்சியினர் மண்டபத்தின் முன்பு கூட தொடங்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டது. தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோரை போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குமரி- கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில் கேரளாவிற்கு சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளை தடையின்றி செல்ல அனுமதிக்க வேண்டும். கேரளா செல்லும் கேரள மக்களை அலைக்கழிக்கக் கூடாது. எல்லை பகுதியில் கூடுதல் சுகாதார பணியாளர்கள், போலீசாரை பணியில் நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், காங்கிரசாரும் சமாதானம் அடைந்தனர். மேலும், கைதான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசார் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்