அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்து பகுதியில் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-07 03:27 GMT
அரியாங்குப்பம்,

புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதியில் 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மேற்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட சொர்ணாநகர் மற்றும் அம்பேத்கர் நகர், பி.சி.பி. நகர், கோட்டைமேடு, காலாந்தோட்டம், சிவகாமி நகர், கண்ணம்மா தோட்டம், அருந்ததிபுரம் உள்ளிட்ட பகுதிகள் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் சீல் வைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சொர்ணாநகரில் கொரோனா தொற்று ஏற்பட்டு 35 நாட்களுக்கு மேலாகியும், மேற்கொண்டு யாருக் கும் தொற்று ஏற்படவில்லை. இருப்பினும் கட்டுப்பாடுகள் அகற்றப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சொர்ணாநகரை மட்டும் கட்டுப்பாட்டில் வைத்துவிட்டு, மேற்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட மற்ற பகுதிகளில் கெடுபிடிகளை தளர்த்தவேண்டும் என்று கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் இதுநாள் வரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை.

பொதுமக்கள் திரண்டனர்

இந்த நிலையில் சொர்ணாநகர் பகுதி சீல் வைக்கப்பட்ட நாளில், புதுவை முத்தியால்பேட்டையும் சீல் வைக்கப்பட்டது. தற்போது அந்த பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது. எனவே தங்கள் பகுதியிலும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி, சொர்ணாநகரை சுற்றியுள்ள அம்பேத்கர் நகர், பி.சி.பி.நகர், கோட்டைமேடு, காலாந்தோட்டம் பகுதி மக்கள் நேற்று காலை அரியாங்குப்பம் புறவழிச்சாலை போக்குவரத்து சிக்னல் அருகே திரண்டனர்.

தகவல் அறிந்த ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. தாசில்தார் ராஜேஷ் கண்ணா ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும் இன்று (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளை நேரில் அழைத்து வருவதாகவும் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. கூறினார். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்