கரூர் மணல்மேடு ஜவுளி பூங்காவில் தொழிற்சாலைகள் இயக்கம் முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு

மணல்மேடு ஜவுளி பூங்காவில் தொழிற்சாலைகள் நேற்று முதல் இயங்கியது. இதில் உள்ள முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் அன்பழகன் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2020-05-07 04:56 GMT
கரூர், 

மணல்மேடு ஜவுளி பூங்காவில் தொழிற்சாலைகள் நேற்று முதல் இயங்கியது. இதில் உள்ள முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் அன்பழகன் நேரில் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழக அரசு வழங்கியுள்ள தளர்வு விதிகளைப் பின்பற்றி தொழிற்சாலைகள் இயக்கப்படுகின்றதா என்பது குறித்தும், பணியாளர்கள் தகுந்த சமூக விலகலை கடைபிடித்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் கரூர் மணல்மேடு ஜவுளி பூங்காவில் முறையாக அனுமதி பெற்று இயங்கி வரும் தொழிற்சாலைகளில் கலெக்டர் அன்பழகன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, மண்மங்கலம் வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பேட்டி

பின்னர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் நகரப்பகுதியி்ல் இருக்கக்கூடிய வர்த்தக நிறுவனங்கள், உற்பத்தி சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் 30 சதவீத ஊழியர்களுடனும், ஊரகப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் 50 சதவீத ஊழியர்களுடனும் இயக்கப்பட வேண்டும். மேலும், பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், முககவசம் வழங்க வேண்டும். உடல் வெப்பநிலையை அறிந்த பின் அவர்களை பணியாற்ற அனுமதிக்க வேண்டும். அனைவரும் சமூக விலகலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள்-ஆயத்த ஆடை

இந்நிலையில், கரூர் தாந்தோணி மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணல்மேடு பகுதியில் உள்ள ஜவுளி பூங்காவில் இயங்கி வரும் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் உள்ளே வரும் அனைத்து பணியாளர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுகின்றது. தொழிற்சாலைக்குள் குறைந்த அளவிலான பணியாளர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆயத்த ஆடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பணியாற்றுகிறார்கள். அனைவருக்கும் முககவசம் வழங்கப் பட்டுள்ளது.

சட்டப்படி நடவடிக்கை

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை நகரப்பகுதிகளில் 300 நிறுவனங்களும், ஊரகப்பகுதிகளில் 100 நிறுவனங்களும் முறையாக அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் அரசின் விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகின்றதா என்பதை கண்காணிக்க உதவி ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனுமதி கேட்கும் நிறுவனங்களை அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு அரசின் விதிகளை பின்பற்றி அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகின்றது. சமூக விலகலை கடைபிடிக்க இயலாத நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. முறையாக அனுமதி பெறாமலோ, அனுமதி பெற்று அரசின் விதிகளை பின்பற்றாமலோ தொழில் நிறுவனங்கள் இயக்கப்படுவது ஆய்வின்போது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்