ஊரடங்கு தளர்வால் கொரோனா ஆபத்தை உணரவில்லை: சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்கள்

நெல்லையில் ஊரடங்கு தளர்வால் கொரோனா ஆபத்தை உணராமல் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நடமாடி வருகிறார்கள்.

Update: 2020-05-07 23:00 GMT
நெல்லை, 

கொரோனா வைரஸ் பரவி உலகம் முழுவதும் மக்களை துன்புறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 3-வது கட்டமாக வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டதால், ஊரடங்கு கடந்த 4-ந்தேதி முதல் தளர்த்தப்பட்டது. இதனால் வழக்கம்போல் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.

இதையொட்டி பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்காக காலை முதல் மாலை வரை நகரில் அங்கும் இங்கும் சென்று வருகிறார்கள். மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள், பேக்கரி, ஓட்டல்கள், எலக்ட்ரிக்கல், மெக்கானிக், செல்போன் கடைகள் என 70 சதவீதம் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் வழக்கம்போல் வீடுகளில் இருந்து வெளியே வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.

சாலைகளில் வாகனங்களின் பெருக்கமும் அதிகமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகன இயக்கம் உள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது. மின்சாதன பொருட்கள் விற்பனை கடைகள், கட்டிட பணிகளுக்கு தேவையான இரும்பு, சிமெண்டு பொருட்கள் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. தொழில் செய்யும் நபர்களும் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கினர்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 12 நாட்களாக கொரோனா பரவாமல் இருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா ஆபத்தை உணராமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முககவசம் அணியாமலும் மக்கள் நடமாடுகின்றனர். இதனால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை தொடர்ந்து அமலில் இருப்பதால் 5 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும். முககவசம், கையுறை அணிந்து சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். இல்லையென்றால் மீண்டும் கொரோனா அபாய நிலையை எதிர்கொள்ள நேரிடும். கொரோனா குறித்து பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பொதுமக்களும் சமூக அக்கறையுடன், கொரோனா பரவாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கையுடன் தனித்திருக்க வேண்டும்” என்றனர்.

மேலும் செய்திகள்