திருவாரூர் மாவட்டத்தில் 101 மதுக்கடைகள் திறப்பு நீண்டவரிசையில் காத்திருந்து மதுப்பிரியர்கள் வாங்கி சென்றனர்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 101 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அப்போது நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை மதுப்பிரியர்கள் வாங்கி சென்றனர்.

Update: 2020-05-07 23:51 GMT
திருவாரூர், 

திருவாரூர்் மாவட்டத்தில் நேற்று 101 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அப்போது நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை மதுப்பிரியர்கள் வாங்கி சென்றனர்.

மதுக்கடைகள் திறப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அப்போது மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில்் ஊரடங்கில் இருந்து பல்வேறு தொழில்கள், வணிக நிறுவனங்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து திருவாரூர் டாஸ்மாக் கிடங்கில் இருந்து மது வகைகள் அனைத்து மதுக்கடைகளுக்கு வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் கடை வாசலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்திட தடுப்பு அமைக்கப்பட்டன. சமூக இடைவெளி கடைபிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதையடுத்து 43 நாட்களுக்கு பிறகு திருவாரூர் மாவட்டத்தில் 101 மதுக்கடைகள் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது. இதில் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், 40-ல் இருந்து 50 வயதிற்கு உட்பட்டவர்கள் 1 மணி முதல் 3 மணி வரையிலும், 40 வயதிற்கு உட்பட்டவர்கள் 3 மணி முதல் 5 மணி வரையிலும் மது வாங்க அனுமதிக்கப்பட்டது. மேலும் நீதிமன்ற உத்தரவின்படி மது வாங்க ஆதார் அட்டை அவசியம் எனவும், ஒருவருக்கு 750 மி.லி. மட்டும் அனுமதி என தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

இதையடுத்து மதுக்கடைகளில் காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை மதுப்பிரியர்கள் வாங்கி சென்றனர். ஆனால் ஒரு சில பகுதிகளில் மட்டுமே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதில் மது வாங்கும் அவசரத்தில் ஆதார் அட்டையை மறந்து வந்தவர்கள் மீண்டும் வீட்டிற்கு சென்று எடுத்து வந்தனர். ஒலிபெருக்கி மூலம் சமூக இடைவெளியை கடைபிடிக்க குடி மகன்களுக்கு மதுபான கடை ஊழியர்கள் அறிவுறுத்தினர். மாவட்டம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்