நாமக்கல் மாவட்டத்தில் 168 டாஸ்மாக் கடைகள் திறப்பு: அலைமோதிய மதுப்பிரியர்கள் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் 168 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. இருப்பினும் சமூக இடைவெளியை பின்பற்றி மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்கினர்.

Update: 2020-05-08 01:32 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி தமிழக அரசின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் உள்ள 188 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.

இந்த நிலையில் தமிழக அரசு நேற்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது. இதையடுத்து டாஸ்மாக் கடைகளுக்கு வரும் நபர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதியாக கடைகளின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 188 டாஸ்மாக் கடைகளில் நோய் கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள 20 கடைகளை தவிர மீதமுள்ள 168 கடைகளும் திறக்கப்பட்டன. நேற்று காலை 10 மணிக்கு விற்பனையாளர்கள் பூஜை செய்து கடைகளில் விற்பனையை தொடங்கினர்.

பச்சை வண்ண அட்டை

இருப்பினும் தமிழக அரசு காலை 10 முதல் மதியம் 1 மணி வரை 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருந்ததால் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டு உள்ள வண்ண அட்டையுடன் வரும் நபர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால் நேற்று பச்சை வண்ண அட்டைகளுடன் வந்த மதுப்பிரியர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.

இதை கண்காணிக்கவும், பாதுகாப்பிற்காகவும் அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பும் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். இவர்கள் ஒலிப்பெருக்கி மூலம் அரசின் விதிமுறைகளை எடுத்து கூறியவாறு இருந்தனர்.

மேலும் அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற போலீசார் வலியுறுத்தியவாறு இருந்தனர். மதுபானம் வாங்கிய அனைத்து நபர்களின் வண்ண அட்டைகளிலும் டாஸ்மாக் ஊழியர்கள் ‘சீல்’ வைத்தனர். ஒவ்வொரு நபருக்கும் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

பிற்பகல் 3 மணிக்கு மேல் மாலை 5 மணி வரை 40 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்ததால் அந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளில் சற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை இளைஞர்கள் வாங்கி சென்றனர். கடந்த 43 நாட்களாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மதுபானம் கிடைக்காமல் தவித்த மதுப்பிரியர்கள் நேற்று மதுபானங்களை வாங்கி குடித்து தங்களது விரதத்தை முடித்து கொண்டனர். மாலை 5 மணிக்கு அரசு உத்தரவுபடி அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. 

மேலும் செய்திகள்