சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கிடைக்காததால் விழுப்புரத்தில் வடமாநில தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

விழுப்புரத்தில் ஊரடங்கால் பசியும், பட்டினியுமாக வடமாநில தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கிடைக்காததால் தங்கள் குடியிருப்புகளிலேயே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Update: 2020-05-08 22:39 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் கலைஞர் அறிவாலயம் பின்புறம் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்து விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் தள்ளுவண்டியில் ஜூஸ், போர்வை உள்ளிட்ட வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் இந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலையிழந்து பெரிதும் தவித்து வருகின்றனர். அன்றாடம் வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வந்த இவர்கள், கையில் இருந்த பணமும் செலவாகி தற்போது வருமானமின்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி சரிவர உணவும் கிடைக்காமல் தன்னார்வலர்களின் உதவியுடன் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.

உண்ணாவிரதம்

இவர்கள், தங்களை சொந்த மாநிலத்திற்கே அனுப்பி வைக்கும்படி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஆன்லைன் மூலமும் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பித்து 4 நாட்கள் ஆகியும் உரிய அனுமதி வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகத்திடம் சென்று அந்த தொழிலாளர்கள் முறையிட்டும் உரிய பதில் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று முதல் தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளிலேயே உண்ணா விரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

பட்டினியாக கிடந்தே இறந்து விடுவோம்

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கொரோனா ஊரடங்கினால் வேலையின்றி எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பிலும் எங்களுக்கு போதுமான உதவி செய்யப்படவில்லை. அத்தியாவசிய தேவைக்காகவெளியே வந்தால் போலீசார் கண்மூடித்தனமாக லத்தியால் அடித்து விரட்டுகின்றனர். இதனால் எங்களை சொந்த மாநிலத்திற்கே அனுப்பி வைக்கும்படி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கலெக்டர் அலுவலகத்திற்கு நடையாய் நடந்து வருகிறோம். இருப்பினும் யாரும் எங்களை பற்றி கண்டுகொள்ளவில்லை. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதற்கு முன்பாக பட்டினியாக கிடந்தே இறந்து விடும் நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்