விருதுநகர் மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணி தொடக்கம் - தலைமை என்ஜினீயர் நேரில் ஆய்வு

ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விருதுநகர் மருத்துவக் கல்லூரி கட்டுமானப்பணி மீண்டும் தொடங்கியது.

Update: 2020-05-08 23:55 GMT
விருதுநகர், 

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகம் அருகில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப்பணிக்கு கடந்த ஜனவரி மாதம் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. மாநில பொதுப்பணித்துறையின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த கட்டுமானப்பணியில் 200-க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கட்டுமானப்பணி முற்றிலுமாக முடக்கம் அடைந்தது. இங்கு பணியாற்றிய வெளிமாநிலத்தவர்களும் இங்கேயே தங்க வைக்கப்பட்டு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அவர்களும் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் தமிழக அரசு, கட்டுமானப்பணிகள் தொடங்குவதற்கு விதிமுறைகளுடன் அனுமதி அளித்தது. அதன்படி கட்டுமான தொழிலாளர்கள் பணியிடத்திலேயே தங்கி வேலை பார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில் மருத்துவக் கல்லூரி கட்டுமானப்பணி மீண்டும் தொடங்கியது. இங்கு பணியாற்றிய வெளிமாநில தொழிலாளர்கள் கட்டுமானப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 22 ஏக்கர் நிலப்பரப்பில் 33,920 சதுரமீட்டர் பரப்பில் மருத்துவ கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.142 கோடி மதிப்பீட்டில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 29,245 சதுரமீட்டரில் 6 மாடி கட்டிடமும், 3107 சதுரமீட்டரில் கலையரங்கமும், 244.8 நிர்வாக அலுவலகமும், 409 சதுரமீட்டரில் உணவு விடுதியும், 620 சதுரமீட்டரில் வங்கி, தபால் அலுவலகமும், 113 சதுரமீட்டரில் உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்படுகிறது.

மேலும் ரூ.69 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் மாணவ-மாணவிகளுக்கான விடுதி கட்டிடம், பேராசிரியர்களுக்கான குடியிருப்பு, மருத்துவக் கல்லூரி முதல்வருக்கான குடியிருப்பு ஆகியவை கட்டப்படுகிறது. இந்த கட்டிடங்கள் 22,612 சதுரமீட்டர் பரப்பளவில் அமைய உள்ளது. கட்டுமானப்பணியினை மதுரை பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் ரகுநாதன் நேரில் ஆய்வு செய்தார். 

அப்போது மதுரை பொதுப்பணித்துறை மருத்துவ பிரிவு மேற்பார்வை என்ஜினீயர் புவனேஸ்வரன், சிவகங்கை நிர்வாக என்ஜினீயர் சங்கரலிங்கம், விருதுநகர் நிர்வாக என்ஜினீயர் கணேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த கட்டுமானப்பணி முழுவதும் அடுத்த 18 மாதங்களுக்குள் முடிவடையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்