ஜோலார்பேட்டையில், டாஸ்மாக் கடையில் போதுமான இருப்பு இல்லாததால் மது பிரியர்கள் அவதி

ஜோலார்பேட்டையில் போதுமான மது இருப்பு இல்லாததால் டோக்கன் வழங்கவில்லை இதனால் மதுபிரியர்கள் அவதிக்குள்ளானார்கள்.

Update: 2020-05-09 06:21 GMT
ஜோலார்பேட்டை,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ் நாட்டில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை யை அடுத்த பார்சம்பேட்டை ரெயில்வேகேட் அருகே 2 மதுபான கடையில் நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை டோக்கன் வழங்கப்பட்டு மது பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதில் 800 டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு 2 கடைகளிலும் ரூ.11 லட்சத்து 80 ஆயிரத்துக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கடையில் குறை வான இருப்பு இருந்ததால், டோக்கன் கொடுத்தால் மது பிரியர்கள் பிரச்சினை ஏற்படுத்து வார்கள் எனக்கருதி லாரி மூலம் புதிய மது பாட்டில்கள் நேற்று மதியம் 12 மணியளவில் கொண்டு வரப்பட்டது. சிறு விளையாட்டு அரங்கில் டோக்கன் வழங்கி, அதன்பிறகு 1 மணியளவில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக நேற்று அதிகாலை முதல் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு மைதானத்தில் டோக்கன் பெற வந்த மது பிரியர்கள் காத்திருந்தனர். ஆனால் டாஸ்மாக்கில் இருப்பு இல்லாததால் போலீ சார் டோக்கன் வழங்கவில்லை. இதனால் மதுபிரியர்கள் அவதிக்குள்ளானார்கள்.

இதனால் வெயிலையும் பொருட்படுத்தாமல் மது பிரியர்கள் சிறு விளையாட்டு அரங்கை சுற்றிலும் மதுபாட்டில்களை வாங்கிச் செல்ல நீண்ட வரிசையில் வெயிலில் காத்திருந்தனர். அதன் பிறகு 12.30 மணிக்கு போலீசார் மது பாட்டில்கள் வாங்க டோக்கன் பெற வந்த மது பிரியர்களை சமூக இடைவெளியை கடைப் பிடித்து வரிசையில் நீக்குமாறு வலியுறுத்தி ஆதார் எண்ணை பரிசோதித்து அதன் பிறகு விளையாட்டு மைதானத்தில் சமூக இடைவெளி விட்டு போடப்பட்டுள்ள கட்டங் களில் அமரவைத்து டோக்கன் வினியோகம் செய்தனர்.

இதில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் மது பாட்டில் வாங்க ஆர்வத்துடன் நீண்ட நேரம் காத்திருந்து டோக்கன் பெற்று, மதுபாட்டில்களை வாங்கிச் சென்றார். மேலும் டோக்கன் வழங்கப்பட்டு மது பிரியர்கள் சமூக இடை வெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக சூழ்ந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து, சப் -இன்ஸ்பெக்டர் விஜய் முத்துக்குமார் மற்றும் போலீசார் மது பிரியர்களை கட்டுப்படுத்தினர். மேலும் நேற்று அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வழங்க தாமதமானதால் பார்சம்பேட்டை பகுதியில் மது பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

மேலும் செய்திகள்